உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்

விழுப்புரம் அருகே சூறைக்காற்றுடன் மழை மின் கம்பங்கள், வீட்டின் மேற்கூரைகள் சேதம்

விழுப்புரம் : விழுப்புரம் பகுதியில் வீசிய சூறைக்காற்றில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் மற்றும் மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன.விழுப்புரம் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 10:00 மணிக்கு இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்தது. அப்போது திடீரென வீசிய சூறைக்காற்றில் காணை, குப்பம், ஆயந்துார், தெளி உள்ளிட்ட கிராமங்களில் 20க்கும் மேற்பட்ட வீடுகளில் ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகளால் ஆன மேற்கூரைகள் பறந்து சேதமானது.மேலும், பல கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததில் ஏராளமான மின்கம்பங்கள் உடைந்தும், மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் கிராமங்கள் இருளில் மூழ்கியது. மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் தடைப்பட்டது.பொதுப்பணித்துறையினர் நேற்று காலை 7:00 பொக்லைன் மூலம், சாலைகளில் விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினர். தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் காலை 9:00 மணிக்கு மேல் முறிந்த மின்கம்பங்களை மாற்றி, மின் இணைப்பு வழங்கும் பணியை மேற்கொண்டனர்.

சாலை மறியல்

சூறைக்காற்றில் சேதமடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின் பாதைகளை சீரமைக்கும் பணி நேற்று காலை 9:00 மணிக்கு மின்துறையினர் துவங்கினர். இருப்பினும் இரவு 8:00 மணிக்கு மேலும் மின்சாரம் வராததால், காணை, குப்பம், பெரும்பாக்கம், காங்கேயனுார் உள்ளிட்ட கிராம மக்கள் குடிநீர் கூட கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர்.ஆத்திரமடைந்த காணை மக்கள் நேற்று இரவு 8:30 மணிக்கு விழுப்புரம் மெயின் ரோட்டில் பி.டி.ஓ., அலுவலகம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் மின்வாரிய செயற்பொறியாளர் சுரேஷ்குமார், உதவி பொறியாளர் செந்தில்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது, மின்னல் தாக்கியதில் பல இடங்களில் இன்சுலேட்டர்கள் பழுதாகி உள்ளது. அதனை ஊழியர்கள் சீரமைத்து, படிப்படியாக மின் விநியோகம் வழங்கி வருவதாக கூறினர். அதனையேற்று இளைஞர்கள் கலைந்து சென்றனர். சற்று நேரத்தில் அப்பகுதியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

மழையளவு

மாவட்டத்தில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று காலை 6:00 மணிவரை பெய்த மழை அளவு மி.மீ., வருமாறு:விழுப்புரம்- 46; முகையூர்-18; நேமூர்-9; கோலியனுார்-7; மணம்பூண்டி-7; கெடார்-6; அரசூர்-3; அவலுார்பேட்டை -1 மி.மீ., சராசரி 4.64 மி.மீ., ஆகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி