| ADDED : ஆக 15, 2024 05:03 AM
புதுச்சேரி: தகுதியானவர்களுக்கு மட்டுமே சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.சட்டசபை கேள்வி நேர விவாதம்; பிரகாஷ்குமார் (சுயேச்சை): புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து பல மாதம் ஆகிறது. ஒருவருக்கும் கிடைக்கவில்லை. காலதாமத்தை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் ரங்கசாமி: அத்துறையில் அமைச்சக உதவியாளர்கள் 12 பதவிகள் காலியாக உள்ளதால் காலதாமதம் ஏற்படுகிறது. புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பி.ஆர்.,சிவா (சுயேச்சை): உண்மையான ஏழைகளை விட்டு வசதியானவர்களுக்கு சிவப்பு ரேஷன் கார்டு தந்துள்ளனர். முதல்வர்- ரங்கசாமி: இது எப்பவும் இருக்கும் பிரச்னை தான். நானும் குடிமை பொருள் அமைச்சராக இருந்துள்ளேன். சிவப்பு ரேஷன்கார்டுகளை அதிகமாக ஏற்றிவிட்டோம். 2.63 லட்சம் சிவப்பு ரேஷன்கார்டு இருக்கு.காப்பீடு திட்டம் உள்ளிட்ட பிற பயன் கிடைப்பதால் சிவப்பு ரேஷன் கார்டு கேட்கின்றனர். இனி தகுதியானவர்களுக்கு மட்டுமே சிவப்பு ரேஷன் கார்டு வழங்கப்படும். ஜான்குமார்(பா.ஜ.,): சிவப்பு ரேஷன் கார்டு பெற 75 ஆயிரம் வருமான உச்சவரம்பு வைத்துள்ளனர். தனி நபர் வருமானம் புதுச்சேரியில் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளது. ஒருவர் சாதாரணமாக 10 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். இந்த வருமான உச்ச வரம்பை 2 லட்சமாக உயர்த்த வேண்டும்.முதல்வர் ரங்கசாமி: அரசு ஆராய்ந்து முடிவு எடுக்கும். பிரகாஷ்குமார் (சுயேச்சை): தொகுதி எம்.எல்.ஏ.,வுக்கு தெரியாமல்ரேஷன் கார்டுகளை கொடுக்கின்றனர். முதல்வர் ரங்கசாமி: அனைத்தையும் எம்.எல்.ஏ., கேட்டு தான் செய்யவேண்டும் என நினைக்கக்கூடாது.என்னையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஒரு எம்.எல்.ஏ.,வை ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம். அவரிடம் சென்று அவரிடம் எப்படி கையெழுத்து பெற்று விண்ணப்பிக்க முடியும். தகுதியான பயனாளிகள் அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரிகளின் கையெழுத்து பெற்று விண்ணப்பிக்கலாம். தகுதி இருந்தால் கொடுக்க போகின்றனர். பிரகாஷ்குமார் (சுயேச்சை): மக்கள் பிரதிநிதிகள் கொடுக்கும் விண்ணப்பத்திற்கு ரேஷன்கார்டுகள் கொடுக்கவில்லை.முதல்வர் ரங்கசாமி: தகுதியானவர்களுக்கு சிவப்பு ரேஷன்கார்டுகள் வழங்கப்பட வேண்டும். இது சம்பந்தமாக அதிகாரிகளை நேரில் நீங்கள் அணுகலாம்.