| ADDED : ஜூலை 23, 2024 11:28 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் 5 பேரிடம் பல்வேறு வகையில் 1.75 லட்சம் ரூபாய் மோசடி செய்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி, குருமாம்பேட் பகுதியை சேர்ந்தவர் திவ்யா. இவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், வங்கி அதிகாரி போல, தன்னை அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் கிரெடிட் கார்டு கடன் வரம்பை அதிகரித்து கொடுப்பதாக பேசினார். அதை நம்பி, அவரது மொபைல் போனுக்கு வந்த ஓ.டி.பி., எண்ணை கொடுத்தார். அடுத்த சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 97 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. காமராஜர் சாலையை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது ஏ.டி.எம்., கார்டை, கடந்த 20ம் தேதி வெளியில் செல்லும் போது தவற விட்டார்.அதனை தொடர்ந்து, அவரது வங்கி கணக்கில் இருந்து 31 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது.ரெட்டியார்பாளைத்தை சேர்ந்த சூரியகுமார் என்பவரது வங்கி கணக்கில் இருந்து 36 ஆயிரம் ரூபாய், வில்லியனுார் மாதா கோவில் வீதியை சேர்ந்த பிரவீன்குமார் வங்கி கணக்கில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் மர்ம நபர்கள் எடுத்தனர். மேலும், அதே பகுதியை சேர்ந்த ரேஷ்னி என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். அதற்கான செயலாக்க கட்டணமாக 6 ஆயிரம் பணம் அனுப்பி மர்ம கும்பலிடம் அவர் ஏமாந்தார். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து, மோசடி கும்பலை தேடி வருகின்றனர்.