| ADDED : ஜூலை 12, 2024 05:26 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் 44. 94 லட்சம் ரூபாயை இழந்துள்ளனர்.புதுச்சேரி சாந்தி நகரை சேர்ந்த கோபி, இவரை டெலிகிராம் மூலம் தொடர்பு கொண்ட நபர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, கூறினார். அதை நம்பி கோபி 38.56 லட்சம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். இதேபோல், நெல்லித்தோப்பு இமானுவேல், 3.90 லட்சம், ஞானப்பிரகாசம் நகர் சபீஷ் 1.10 லட்சம் பங்குச்சந்தையில் முதலீடு செய்து ஏமாந்தனர். மேலும், காமராஜர் நகரை சேர்ந்த கோபிகிருஷ்ணனிடம் பேசிய நபர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறி வங்கியின் விவரங்கள் மற்றும் ஓ.டி.பி., கேட்டுள்ளார். இதைநம்பி கோபிகிருஷ்ணன் அனைத்து விவரங்களையும் தெரிவித்த பின், அவரது வங்கி கணக்கிலிருந்த 76 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டது. புதுச்சேரியை சேர்ந்த கவுதம் என்பவர் ஆன்லைனில் வேலை தேடினார். அவரை தொடர்பு கொண்ட நபர் ஏர்போர்ட் வேலை இருப்பதாகவும், அதற்கு பணம் தருமாறு கூறினார். அதைநம்பி கவுதம் ரூ. 22 ஆயிரம் பணத்தை அனுப்பி ஏமாந்தார்.உருளையன்பேட்டை பகுதியை சேர்ந்த விநாயகம் என்பவரை தொடர்பு கொண்டு பேசிய நபர், உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க பணம் அனுப்புமாறு கேட்டு மிரட்டினார். இதையடுத்து, விநாயகம் 20 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். வழுதாவூர் சாலையை சேர்ந்த ரமணி என்பவர் மோசடி கும்பலிம் 20 ஆயிரம் இழந்தார். இதன் மூலம் நேற்று புதுச்சேரியை சேர்ந்த 7 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.44.94 லட்சம் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.