| ADDED : ஜூன் 20, 2024 09:09 PM
புதுச்சேரி: காய்கறி மலர் சாகுபடிக்கான விதைகள் 50 சதவீத மானியத்தில் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.இது குறித்து புதுச்சேரி தோட்டக்கலை கூடுதல் வேளாண் இயக்குனர் சிவராமன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகம் மூலம் தோட்டக்கலை விவசாயிகளை ஊக்குவிக்க திட்டமிட்டுள்ளது.விவசாயத்தை பன்முகப்படுத்தி காய்கறி,மலர் சாகுபடி உற்பத்தியை அதிகரிக்க யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பிரிவு தோட்டக்கலை விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் தரமான நாட்டு,கலப்பின காய்கறி,மலர் விதைகள் குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தில் வழங்க திட்டமிட்டுள்ளது.இத்திட்டத்தில் 50 சதவீத மானிய விலையில் காய்கறி,மலர் சாகுபடிக்கான விதைகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் நேற்று முதல் தோட்டக்கலை விவசாயிகளிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.விண்ணப்பங்கள் தாவரவியல் பூங்காவில் இயங்கும் கூடுதல் வேளாண் இயக்குனர் தோட்டக்கலை அலுவலகம்,அந்தந்த கிராம பகுதியில் உள்ள உழவர் உதவியகங்களில் பெற்றுக்கொள்ளலாம்.வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இணையதளம் வாயிலாகவும் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஆதார் நகல் ,ரேஷன் கார்டு நகல்,விவசாய அடையாள அட்டை நகல்,வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் ,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இணைத்து அடுத்த மாதம் 20ம் தேதிக்குள் தோட்டக்கலை அனுவலகத்தில் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.