உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தரமற்ற மருந்துகள் தனி குடோனில் வைத்து சீல்

தரமற்ற மருந்துகள் தனி குடோனில் வைத்து சீல்

புதுச்சேரி : தரமற்ற மருந்து சப்ளை செய்து 2.5 கோடி மோசடி செய்த வழக்கில், சுகாதாரத்துறையில் இருந்த மருந்துகள் தனி குடோனில் இருப்பு வைத்து சீல் வைக்கப்பட்டது.புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2019ம் ஆண்டு வழங்கிய சத்து மாத்திரைகள், விட்டமின் - ஏ மருந்துகள் சாப்பிட்ட கர்பிணிகள், குழந்தைகள் பாதிக்கப்பட் டனர். உடனடியாக மருந்துகள் திரும்ப பெறப்பட்டு சோதனை செய்தனர். அதில், தரமற்ற மருந்து சப்ளை செய்தது தெரிய வந்தது.கடந்த 2023ம் ஆண்டு இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விசாரணையில் புதுச்சேரி சுகாதாரத்துறையில் பணியாற்றிய நடராஜன் தன் மனைவி பத்மா பெயரில் நடத்திய பத்மஜோதி எண்டர்பிரைசஸ், சாய்ராம் ஏஜென்சி என்ற இரு கம்பெனிகள் மூலம் மருந்து டெண்டரில் மோசடி செய்து டெண்டரை எடுத்துள்ளார்.இதில் நடராஜன் முன்ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், நடராஜனை கைது செய்ய உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து நடராஜன் கைது செய்யப்பட்டார்.நடராஜன் அளித்த வாக்குமூலத்தின்படி, கடந்த 2018-19-20ம் ஆண்டுகளில் மருந்து வாங்க கூடிய கமிட்டி உத்தரவுகள், மருந்து கொள்முதல் விபரம் உள்ளிட்ட தகவல்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் சுகாதாரத்துறையிடம் கேட்டது.தொடர்ந்து சுகாதார துறையிலும் நேரில் விசாரணை நடத்தினர். அந்த 2018- 19 ஆண்டுகளில் மொத்தம் 2.5 கோடி ரூபாய் அளவிற்கு தரமற்ற மருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இந்த தரமற்ற மருந்துகள் சுகாதார துறையில் மற்ற மருந்துகள் இருக்கும் குடோனில் இருப்பு வைக்கப்பட்டு இருந்தது.வழக்கு விசாரணைக்காக இந்த மருந்துகளை மற்ற மருந்துகளுடன் இருப்பு வைக்காமல் தனியாக இருப்பு வைத்து சீல் வைத்து ஒப்படைக்க வேண்டும் என, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரி, சுகாதார துறையிடம் வேண்டுகோள் வைத்தனர்.இதனை தொடர்ந்து சுகாதார துறையில் இருந்த தரமற்ற மருந்துகள் நேற்று லாரிகளில் திப்புராயப்பேட்டையில் உள்ள குடோனுக்கு கொண்டு செல்லப்பட்ட அங்கு சீல் வைத்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ