| ADDED : மே 24, 2024 04:01 AM
காரைக்கால்: காரைக்காலில் தொடர் கன மழையால் திருநள்ளாறு நுாலாற்று தடுப்பு அணை கரையில் ஏற்பட்ட உடைப்பை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கடைமடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.காரைக்கால் மாவட்டத்தில் நெடுங்காடு, திருநள்ளாறு, திருப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. மேலும் தமிழக பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பிரதான ஆறுகளில் நீர் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் பருத்தி பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் பலர் வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.மேலும் பிரதான பாசன ஆறான நுாலாறின் கரை உடைப்பு ஏற்பட்டு நீரை தேக்கி வைக்கமுடியாமல் வீணாக கடலில் கலக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதில் திருநள்ளாறு குமாரக்குடி பகுதியில் நுாலாற்று பாசனம் மூலம் சேத்துார் ,குமாரக்குடி,இளையான்குடி,தென்னங்குடி. செல்லுார் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1250 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது. குமாரக்குடி கிராமத்தில் உள்ள நுாலாற்று பண்ணை வாய்க்கால் தலைப்பில் பிரஞ்சுக்காலத்தில் கட்டப்பட்ட சிறிய தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் நுாலாற்றில் நீர் வரத்து இருக்கும் போது தடுப்பு அணையைக்கொண்டு ஆற்று நீரை பிரித்து பண்ணை வாய்க்காலில் திருப்பி சுமார் 750 ஏக்கரில் சம்பா,குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக நுாலாற்று, பண்ணை வாய்க்கால் தலைப்பில் உள்ள கரையில் உடைப்பு ஏற்பட்டு நீர் வீணாக கடலுக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இது குறித்து கடைமடை விவசாயிகள் சங்கத்தலைவர் சுரேஷ் கூறுகையில்., திருநள்ளாறு நுாலாற்றில் பண்ணை வாய்க்கால் மூலம் பல்வேறு பகுதி விவசாயிகள் முப்போக சாகுபடி செய்து வருகின்றனர். இதனிடையே நுாலாற்று தடுப்பு அணை கரை உடைப்பு ஏற்பட்டு சுமார் 20 அடி உள்வாங்கியுள்ளது. உடைப்பு ஏற்பட்ட பகுதி அருகில் நல்லம்மல் ஏரி உள்ளதால் கரையில் மேலும் அரிப்பு ஏற்பட்டு நீர் முழுவதும் ஏரிக்கு சென்று ஆற்று றோரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தண்ணீர் செல்லும் நிலை உள்ளது.இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் உள்ளனர்.எனவே மாவட்ட நிர்வாகம் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை போர்க்கால அடிப்படையில் சீர்செய்ய வேண்டும் என்றார்.