| ADDED : ஆக 07, 2024 05:24 AM
புதுச்சேரி : மது குடிப்பதற்காக பைக் திருடிய டிப்பர் லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியை சேர்ந்தவர் நாராயணன்,44. இவர் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலையில், செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த, 2ம் தேதி காலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காக வந்தார்.தனது பைக்கை அரசு மருத்துவமனை எதிரே நிறுத்தி விட்டு, சிகிச்சைக்கு சென்றார். சிகிச்சை முடிந்து வந்து திரும்பி வந்து மீண்டும் பார்த்த போது, பைக்கை காணவில்லை. இது குறித்து அவர் பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.பைக்கை திருடியது மரக்காணம் பகுதியை சேர்ந்த சரத்குமார், 22, என தெரிய வந்தது. இன்ஜினியரிங் டிப்ளமோ முடித்த, இவர் டிப்பர் லாரி டிரைவாக வேலை பார்த்து வந்தார். மது குடிப்பதற்காக அவ்வப்போது இருசக்கர வாகனங்களை திருடி விற்பதை வாடிக்கையாக வைத்திருந்ததும், கடந்த சில மாதங்களுக்கு முன், பைக் திருட்டில் சிக்கி, சரத்குமார் சிறைக்கும் சென்று வந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து பைக்கை கைப்பற்றினர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.