மின் கட்டணத்தை கட்ட தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி, லிங்க் அனுப்பி பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.ரெட்டியார்பாளையம், லாம்பர்ட் சரவணன் நகரை சேர்ந்த பெருமாள் என்பவரின் மொபைல் போனுக்கு, சில நாட்களுக்கு முன் எஸ்.எம்.எஸ்., வந்துள்ளது.அதில், மின் கட்டணத்தை கட்டுவதற்கு இன்றே கடைசி நாள். நீங்கள் மின் கட்டணத்தை கட்டத் தவறினால் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும், பணம் கட்டுவதற்கு கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் என்று குறிப் பிடப்பட்டு இருந்தது. அதை உண்மை என்று நம்பிய பெருமாள், பணம் கட்டுவதற்கு அதிலிருந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். பின், அவருடைய அக்கவுண்ட் நம்பர், கிரெடிட் கார்டு நம்பர் மற்றும் ஓ.டி.பி., யை அனுப்பியுள்ளார். சிறிது நேரத்தில், அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 30 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சி அடைந்த அவர், இணைய மோசடி கும்பல் பணத்தை திருடியதை உணர்ந்து, சைபர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் விசாரணை நடந்தது வருகிறது. இதேபோல், புதுச்சேரியில் பலருக்கும் மின் கட்டணத்தை கட்ட தவறினால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று கூறி, லிங்க் அனுப்பி பணம் பறிப்பது அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
1930க்கு டயல் செய்யுங்க...
சைபர் கிரைம் சீனியர் எஸ்.பி., கலைவாணன் கூறியதாவது:மின் கட்டணம் கட்டுவதற்கு கடைசி தேதி, மின் கட்டணத்தை கட்டாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தெரியாத எண்ணிலிருந்து வரும் எஸ்.எம்.எஸ்.,களை முற்றிலும் நம்ப வேண்டாம். இணைய வழி மோசடி கும்பலின் பணம் பறிப்பதற்கான முயற்சியே இது.இதேபோன்று கடந்த ஒரு வாரங்களில் பத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு விசாரித்து வருகிறோம். ஆகையால் குறுஞ்செய்தியோ அல்லது இணையதளங்களில் வரும் விளம்பரங்களையோ நம்பி, அதன் உண்மை தன்மையை அறியாமல், பணத்தை அனுப்ப வேண்டாம்.இணைய மோசடி கும்பல் குறித்து புகார் தெரிவிக்க 1930 மற்றும் www.cybercrime.gov.inஎன்ற இணைய முகவரில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.