காரைக்கால்: புதுச்சேரி காங்., வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து கோட்டுச்சேரி, நெடுங்காடு மற்றும் மீனவ கிராமங்களில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஓட்டு சேகரித்து வருகிறார்.நேற்று இரண்டாம் நாளாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வேட்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் ஆதரவாளர்களுடன் திருப்பட்டினம், நிரவி, திருநள்ளாறு, வாஞ்சூர், அம்பகரத்துார், சேத்துார் உட்பட பல பகுதிகளில் ஓட்டு சேகரித்தனர்.முன்னதாக இவர்களுக்கு காங்., மாவட்ட பொதுச்செயலாளர் கருணாநிதி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. நாகதியாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் சந்திரமோகன், முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன், வட்டார தலைவர் சுப்பையன், இளைஞர் காங்., மாவட்ட தலைவர் ரஞ்சித் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.பிரசாரத்தில், காங்., வேட்பாளர் வைத்திலிங்கம் பேசுகையில், 'மத்தியில் ஆளும் பா.ஜ., மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை இல்லா திண்டாட்டம் காணப்படுகிறது. அரசு வேலைகள் முடக்கப்பட்டுள்ளது. தொழில்வளர்ச்சி இல்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. நாட்டில் அரிசி, உளுந்து, பூண்டு, புளி உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது. சமையல் காஸ் மூன்று மடங்கு உயர்ந்துள்ளது. மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் உணவு தட்டுப்பாடு ஏற்படும் ஆபாயம் உள்ளது. இதை மாற்ற வேண்டும் என, இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்டது.மத்தியில் ராகுல் தலைமையில் ஆட்சி அமர்ந்தால் 30 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும். இதில் மகளிர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் கூடுதல் ஊதியம் வழங்கப்படும். எனவே, வளமான ஆட்சிக்கு அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.