2 ஐ.ஏ.எஸ்., 6 பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்புகளில் இருந்து விடுவிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின்படி வாக்காளர் பதவி அதிகாரிகளாக செயல்படும் 2 ஐ.ஏ.எஸ்., மற்றும் 6 பி.சி.எஸ்., அதிகாரிகள் கூடுதல் பொறுப்பகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, சப் - கலெக்டராக (தெற்கு) பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி இஷிதா ரதி கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் பொறுப்பிலிருந்தும், ஏனாம் மண்டல நிர்வாகியாக பணியாற்றி வரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரி அங்கித்குமார் கூடுதலாக கவனித்து வரும் ஏனாம் நகராட்சி ஆணையர் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று, பி.சி.எஸ்., அதிகாரிகளாக பணியாற்றி வரும் வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தயானந்த் டெண்டுல்கர் கூடுதலாக கவனித்து வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அதிகாரி பொறுப்பிலிருந்தும், தொழிலாளர் துறை துணை ஆணையர் சந்திரகுமரன் கூடுதலாக கவனித்து வந்த முப்படை நலத்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்தும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் கூடுதலாக கவனித்து வந்த பாட்கோ மேலாண் இயக்குநர் பொறுப்பிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல், பி.சி.எஸ்., அதிகாரிகளான புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி கூடுதலாக கவனித்து வந்த இந்து அறநிலையத்துறை ஆணையர் பொறுப்பிலிருந்தும், மீன்வளத்துறை இயக்குநர் இஸ்மாயில் கூடுதலாக கவனித்து வந்த பி.ஆர்.டி.சி., பொது மேலாளர் (ஆபரேஷன்) மற்றும் துறைமுகத்துறை இயக்குநர் பொறுப்பிலிருந்தும், காரைக்கால் குடிமை பொருள் வழங்கல் துறை துணை இயக்குநர் சச்சிதானந்தம் கூடுதலாக கவனித்து வந்த காரைக்கால் கோவில்கள் செயலதிகாரி பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் பிறப்பித்துள்ளார்.