உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 7 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

7 பி.சி.எஸ்., அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

புதுச்சேரி: இரண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளதுடன், 7 பி.சி.எஸ்., அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2023ம் ஆண்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் அங்கிட்குமார், பூஜா ஆகியோர் புதுச்சேரி அரசில் கடந்த 6ம் தேதி பணியில் சேர்ந்த நிலையில் அவர்களுக்கு பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது. ஏனாம் மண்டல அதிகாரியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி அங்கிட்குமார் நியமிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஏனாம் நகராட்சி ஆணையர் பொறுப்பும் கூடுதலாக அளிக்கப்பட்டுள்ளது. ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா, காரைக்கால் சப் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் 7 பி.சி.எஸ்., அதிகாரிகள் பல்வேறு துறைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காரைக்கால் துணை கலெக்டர் அர்ஜூன் ராமலிங்கம், ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பாட்கோ மேலாண் இயக்குநராக கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஏனாம் மண்டல அதிகாரி முனுசாமி, செய்தி விளம்பரத் துறை இயக்குநராகவும், புதுச்சேரி மாவட்ட நிர்வாக துணை கலெக்டர் வினயராஜ், போக்குவரத்து துறை துணை ஆணையராகவும், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், வேளாண் துறை நிர்வாக பிரிவு இணை இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்து சமய அறநிலை துறை ஆணையர் சிவசங்கரன், புதுச்சேரி மாவட்ட துணை தேர்தல் அதிகாரியாகவும், காரைக்கால் கோவில்கள் செயல் அதிகாரி அருணகிரிநாதன், காரைக்கால் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும், போக்குவரத்து துறை துணை போக்குவரத்து ஆணையர் சவுந்தரி, அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரியாகவும் நியமித்து, இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை கவர்னரின் ஆணைப்படி, தலைமை செயலர் சரத் சவுகான் பிறப்பித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ