புதுச்சேரி, சின்னஞ்சிறிய மாநிலம். நகர பகுதியில் கூப்பிடும் துாரத்தில் தெருவுக்கு தெரு காவல் நிலையங்கள் உள்ளன. சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, சி.பி.சி.ஐ.டி., அனைத்து மகளிர், பி.சி.ஆர். செல், லஞ்ச ஒழிப்பு, கடலோர காவல் பிரிவு, கலால் பிரிவு, சைபர் கிரைம், பொருளாதார குற்ற பிரிவு என, புதுச்சேரியில் 44 காவல் நிலையங்களும், காரைக்காலில் 13 காவல் நிலையங்களும் உள்ளன.ஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை பெருக்கம் போல், குற்ற சம்பவங்களின் எண்ணிக்கையும் புதுச்சேரியில் அதிகரித்து கொண்டே செல்கிறது.ரவுடிகளுக்குள் கோஷ்டி மோதல், கொலை, குடும்ப தகராறு, சொத்து பிரச்னை, கஞ்சா விற்பனை, வழிப்பறி, திருட்டு, போதை பொருட்கள் விற்பனை, லாட்டரி, விபச்சாரம், அடிதடி என குற்ற வழக்குகள் ஒவ்வொரு ஆண்டும் உச்சத்தை தொடுகின்றன.புதுச்சேரியில் கொலை, கொள்ளை, அடிதடி, திருட்டு, வழிப்பறி, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு இந்திய தண்டனை சட்டம் ஐ.பி.சி., பிரிவின் கீழும், ஊருக்குள் நுழைய தடை விதிப்பு, அனுமதியின்றி கூடுதல், தற்கொலை, அடையாளம் தெரியாத உடல் உள்ளிட்டவை சி.ஆர்.பி.சி., பிரிவின் கீழும் வழக்கு பதிவு செய்யப்படும்.இதுதவிர, சிறப்பு மற்றும் லோக்கல் சட்டத்தின் கீழ் ஆயுதம் வைத்திருத்தல், கஞ்சா, வெடி பொருள், லாட்டரி, போக்சோ, மாயமாதல் உள்ளிட்ட வழக்குள் பதிவு செய்யப்படும். புதுச்சேரியில் கடந்த 2021ம் ஆண்டு இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., மற்றும் சிறப்பு சட்ட பிரிவின் கீழ் 6,976 வழக்குகள் பதிவானது.2022ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5,605 ஆக குறைந்தது. கடந்த 2023ம் ஆண்டு புள்ளி விபரம் சமீபத்தில் வெளியானது. இதில், இந்திய தண்டனை சட்டம் ஐ.பி.சி.யின் கீழ் 2,669 வழக்குகள், சி.ஆர்.பி.சி., பிரிவின் கீழ் 2,855 வழக்குகள், சிறப்பு சட்டங்கள் கீழ் 1,598 வழக்குகள் என, மொத்தம் 7,122 வழக்குகள் பதிவாகி உள்ளன. இது முந்தைய ஆண்டை விட 1,517 வழக்குகள் அதிகமாகும்.கடந்த ஆண்டு 26 கொலை, 20 கொலை முயற்சி வழக்குகள் பதிவாகி உள்ளன. 3 கூட்டு கொள்ளை, 6 கூட்டு கொள்ளை வழக்கும், 12 மாமூல் கேட்டு மிரட்டல், 11 வழிப்பறி, 7 பாலியல் பலாத்காரம், 21 கடத்தல், 47 வீடு உடைத்து திருட்டு, 232 பைக் திருட்டு, 19 செயின்பறிப்பு, 74 மோசடிகள், 108 சாலை விபத்தால் உயிரிழப்பு வழக்குகள் பதிவாகி உள்ளன.இதுதவிர, 348 தற்கொலை வழக்குகள், 683 அடையாளம் தெரியாதவர்கள் இறப்பு வழக்குகள், 129 கஞ்சா போதை பொருள் தடுப்பு வழக்குகள், 33 லாட்டரி சீட்டு வழக்குகள், 11 வெடிகுண்டு வழக்குகள் பதிவாகி உள்ளன. 72 சிறார் பாலியல் குற்றம் (போக்சோ) வழக்குகள், 211 பேர் மாயமானதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன.