போலி பத்திரம் தாக்கல் செய்து மதுக்கடை நடத்தியவர் மீது வழக்கு
புதுச்சேரி; போலி வாடகை உடன்படிக்கை பத்திரம் தாக்கல் செய்து 23 ஆண்டுகள் மதுபான கடை நடத்திய உரிமையாளர் மற்றும் அவரது 2 மகள்கள் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.முத்தியால்பேட்டை, தெப்பேசன்பேட் சிங்காரவேலு, 78; ஆடிட்டர். இவருக்கு சொந்தமான முத்தியால்பேட்டை காந்தி வீதி, சவுடாம்பிகை அம்மன் கோவில் சுவர் ஒட்டிய 2 மாடி வீடு உள்ளது. கடந்த 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம், புதுச்சேரி காலத்தீஸ்வரன் கோவில் வீதியைச் சேர்ந்த சம்பந் என்பவருக்கு, வீட்டின் தரை தளத்தை 11 மாத காலத்திற்கு வாடகைக்கு கொடுத்தார்.வீட்டின் தரை தளத்தில் சம்பத் தனது மகள்கள் பெயரில் என்.டி.எஸ்., மதுபான கடை நடத்தி வருகிறார். வாடகை காலக்கெடு முடிந்ததும், 6 மாதத்திற்கு வாடகை காலத்தை நீட்டிக்க கோரினார். அடுத்த 6 மாதம் கழித்து சிங்காரவேலு கேட்டபோது, மேலும் 6 மாத காலத்திற்கு வாடகை காலத்தை நீட்டித்து கொள்வதாக கூறினார். இப்படி பல ஆண்டுகளாக வாடகை காலத்தை நீட்டித்து கொள்வதாகவும், நீதிமன்றத்திற்கு அனுப்பி விடுவேன் என, மிரட்டினார்.வயது முதிர்ச்சி காரணமாக சிங்காரவேலுவால் இடத்தை காலி செய்ய கூற முடியாமல் இருந்தார். கலால் துறையில் தகவல் உரிமை சட்டத்தின்படி பெற்ற தகவலில், என்.டி.எஸ்., மதுபான பார் உரிமையாளர் சம்பத், வாடகை பத்திரத்தை 2002ம் ஆண்டு முதல் சிங்கராவேலு கையெழுத்தை போட்டு புதுப்பித்து வந்ததுள்ளது தெரியவந்தது. தனது வீட்டை காலி செய்ய சிங்காரவேலு கேட்டபோது, காலி செய்ய முடியாது என சம்பத் மிரட்டினார். இது தொடர்பாக சிங்காரவேலு சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தார்.சம்பத் மற்றும் அவரது 2 மகள்கள் மீது மோசடி, ஏமாற்றுதல் மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.