| ADDED : ஜன 04, 2024 03:06 AM
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரை சாலை நகராட்சியின் கட்டண கழிப்பிடத்தில் ரூ. 30 அடாவடி வசூலில் ஈடுபட்ட ஊழியரிடம், சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.புதுச்சேரி கடற்கரை வரும் சுற்றுலா பயணிகள் அவசரத்திற்காக, பழைய சாராய ஆலை மற்றும் டூப்ளக்ஸ் சிலை, நேரு சிலை அருகே நகராட்சியின் கட்டண கழிவறை உள்ளது. இங்குள்ள கழிவறையில் ரூ. 5 மற்றும் ரூ. 10 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆனால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக பல முறை சுற்றுலா பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று காலை கடற்கரைச் சாலை வந்த தமிழக பகுதியைச் சேர்ந்த ஆன்மிக பக்தர்கள், பழைய சாராய ஆலை அருகில் உள்ள கட்டண கழிவறைக்கு சென்றனர். அங்கு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சராசரியாக ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்பட்டது.இது குறித்து பக்தர்கள் கேட்டபோது, இது தான் கட்டணம் என ஊழியர் கராராக தெரிவித்தார்.ஆத்திரமடைந்த பக்தர்கள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட ஏன் அதிகம் வசூலிக்கின்றீர்கள் என கேட்டு வாக்குவாத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு நிலவியது.புதுச்சேரிக்கு சுற்றுலா வருவோரிடம், அவசரத்திற்கு பயன்படுத்தும் கழிவறைக்கு இதுபோல் கூடுதல் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவறை சுத்தமாக இல்லை. பராமரிப்பு இன்றி கிடக்கிறது என, பக்தர்கள் புகார் தெரிவித்தனர்.