அல்சைமர் நோய் பாதிப்பு பெண்களுக்கே அதிகம்
புதுச்சேரி: உலக அல்சைமர் தினத்தையொட்டி இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறை சார்பில் மருத்துவக் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கை மருத்துவ கண்காணிப்பாளர் செவ்வேள் துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நரம்பியல் நிபுணர் நடராஜன் பேசுகையில், அல்சைமர் நோய் (மறதி நோய்) வயது முதிர்வு காரணமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. இந்தியாவில் ஏழு சதவீதம் பேருக்கு இந்த நோய் இருக்கலாம். இந்த நோயை குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாது.ஆனால் மறதி நோய் ஏற்பட்டவர்களுக்கு வேலை செயல்திறன் குறைதல், பேச்சு மற்றும் அன்றாட வாழ்வில் முறைகளை மறப்பது உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும். நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால் மூளையை மருத்துவ ஆய்வு செய்து பார்க்கலாம். மறதி நோய்க்கான சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்கிறது.மனநல நிபுணர்கள் பாலன், மதன் ஆகியோர் பேசுகையில் 'அல்சைமர்' மற்றும் 'டிமென்ஷியா' போன்ற கடுமையான மன நோய்களை தவிர்க்க உணவு மற்றும் வாழ்க்கை முறையில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். பெரும்பாலும் இந்த நோய் பெண்களுக்கு அதிகளவில் ஏற்படுகிறது. நோய் பாதித்தவர்களை குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.பெரும்பாலானவர்களுக்கு இந்த நோய் ஏற்படுவது உடனடியாக அவர்களுக்கு தெரிவதில்லை. மேலும் தைராய்டு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் காரணமாகவும் மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு உள்ளது' என்றனர்.கருத்தரங்கில் நரம்பியல் நிபுணர்கள் சுரேஷ், தேவி மனநல மருத்துவர்கள் பாலன், ஸ்டீபன், மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.