தீபாவளி தொகுப்பிற்கான பணம் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; அன்பழகன் வலியுறுத்தல்
புதுச்சேரி : தீபாவளிக்கு அறிவித்த இலவச அரிசி மற்றும் மானிய தொகுப்பிற்கான தொகை ரூ.1,100 பயனாளிகள் வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகன் வலியுறுத்தி உள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது;முதல்வர் ரங்கசாமி, தீபாவளி பண்டிகைக்கு ரேஷன் கார்டிற்கு 10 கிலோ இலவச அரிசி, 2 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.500 மானியத்துடன் 10 பொருட்கள் அடங்கிய தீபாவளி தொகுப்பு வழங்கப்படும் என்றார். இவ்விரண்டையும், மக்கள் ஆங்காங்கே தேடி அலைந்து கொண்டுள்ளனர்.எனவே அரசு போலி கவுரவம் பார்க்காமல் 10 கிலோ இலவச அரிசிக்கு ரூ.500-ம், 2 கிலோ சர்க்கரைக்கு ரூ.100-ம், 10 உணவு பொருட்களுக்கு மானியம் ரூ.500 என மொத்தம் ரூ.1,100-ஐ அவரவர் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.முதல்வரின் அறிவிப்பு தீபாவளி பண்டிகைக்கானது. அந்த தீபாவளியே முடிந்த பிறகு அதற்குரிய பணத்தை வழங்குவதே நியாயமாகும். இவ்வாறு அவர் கூறினார்.பேட்டியின் போது இணைச் செயலாளர் திருநாவுக்கரசு, பொருளாளர் ரவிபாண்டுரங்கன், மாநில துணைச் செயலாளர் நாகமணி, தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, நகரச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.