உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  முதல்வர் காரை வழிமறித்து வாக்குவாதம் நரம்பை கிராமத்தில் பரபரப்பு

 முதல்வர் காரை வழிமறித்து வாக்குவாதம் நரம்பை கிராமத்தில் பரபரப்பு

பாகூர்: நரம்பை கிராமத்திற்கு பி.ஆர்.டி.சி., பஸ்சை இயக்கிட கோரி, முதல்வர் காரை வழிமறித்து, ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏம்பலம் தொகுதி, நரம்பை கிராமத்தில் சாலை பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன், லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., பங்கேற்று பணியை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியை முடித்து கொண்டு முதல்வர் ரங்கசாமி காரில் ஏறி புறப்பட்டார். கார் சில அடி துாரம் நகர்ந்த நிலையில், நரம்பை கிராமத்தை சேர்ந்த நபர் ஒருவர் திடீ ரென முதல்வர் காரை வழி மறித்து, 'ஏன் எங்க ஊருக்கு பி.ஆர்.டி.சி., பஸ் வருவதில்லை' என்றார். அதற்கு, முதல்வர் ரங்கசாமி, 'இன்னும் ஒரு வாரத்திற்குள் உங்க ஊருக்கு பஸ் வந்து விடும்' என்றார். அதற்கு, அந்த நபர், ஒரு வாரத்திற்குள் பஸ் வரவில்லை என்றால், சாலை மறியல் செய்வோம்' என்றார். அங்கிருந்தவர்கள், அந்த நபரை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால், அந்த நபர் முதல்வர் காரை நகர விடாமல், தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கிருந்த லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., அந்த நபரிடம், முதல்வர் கூறியபடி, ஒரு வாரத்திற்குள் பஸ் வந்துவிடும் என கூறி, அவரை சமாதானம் செய்ய முயன்றார். ஆனால், அவர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பொறுமை இழந்த லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., 'நீ யாருக்கு ஓட்டு போட்ட, அவரிடம் போய் கேளு' என, ஆவேசமாக கூறினார். இதனிடையே, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை அப்புறப்படுத்தினர். பின், முதல்வரின் கார் அங்கிருந்து புறப்பட்டது. இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை