உள்ளாட்சி துறை அதிகாரிகளுடன் பாகூர் எம்.எல்.ஏ., ஆலோசனை
பாகூர்: பாகூர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து, செந்தில்குமார் எம்.எல்.ஏ., உள்ளாட்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.புதுச்சேரி உள்ளாட்சி துறை இயக்குனர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று, துறையின் இயக்குனர் சக்திவேல், துணை இயக்குனர் ரத்னா, கண்காணிப்பு பொறியாளர் பாலசுப்ரமணி, பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் சுப்ரமணியன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், பாகூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.அப்போது, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி, உள்ளாட்சித் துறை, கொம்யூன் பஞ்சாயத்து, எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செய்யப்பட்ட பணிகள் குறித்தும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அதில், புதிய நகர்களுக்கு பொது குடிநீர் குழாய் அமைத்தல், தெரு மின் விளக்கு, சாலை மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை பணிகளை விரைந்து முடிக்கவும், 2023 - -24ம் நிதியாண்டில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட்ட பணிகளை காலதாமதமின்றி விரைவாக முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.