| ADDED : ஜன 07, 2024 05:11 AM
புதுச்சேரி: முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ராமபத்ர தாதம் திருப்பாவையின் 21ம் பாசுரம் குறித்து நேற்று உபன்யாசம் செய்ததாவது:திருப்பாவையின் 21ம் பாசுரத்தில் நந்தகோபனின் கறவைச் செல்வ வளமையைச் சொல்லியுள்ளார். கண்ணனின் ஸ்பரிசத்தால் கறவைகள் எதிர் பொங்கி மீதளித்து குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்களாயின என்பது பாசுரத்தின் பொதுவான பொருளாகும். பிரம்மன் செய்த வேள்வியில் வேதம் ஓத வல்லவர்களால் ஆராதிக்கப்பட்டு, அக்னியில் அவதாரம் செய்து, உயர்ந்தவர் தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், ஆண், பெண், சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடு இன்றி அனைவரும் கண்டு களிக்கும் வண்ணம், கருணையின் மிகுதியால் அர்ச்சா விக்ரக ரூபத்தில் நிற்கின்ற சுடரான தேவாதி ராஜனின் பெருமையைக் காட்டும் பாசுரம் இந்த 21ம் பாசுரம்.ஆயர் குலத்தினில் ஒருவனாக கண்ணன் பிறந்து வாழ்ந்தாலும், கண்ணனுடைய அவதார ரகசியத்தை அறிந்து இப்பாசுரத்தில் உலகினில் தோற்றமாய் நின்ற சுடர் என்று சொல்லியுள்ளாள் என்று அனுபவிக்கலாம்.வெறும் கடமையோ சடங்கோ இல்லை பக்தி. எந்தச் செயலைச் செய்தாலும், அதை எம்பெருமானின் விருப்பப்படி நாம் செய்கின்ற கருவியாகத் தான் உள்ளோம் என்று உணர்ந்தால், அதுவே பரம பக்தி ஆகின்றது. மற்றச் சோதிகளைப் பல காரணங்களால் மறைக்கவும், அழிக்கவும் முடியும். ஆதியஞ் சோதியை மறைக்கவோ, அழிக்கவோ முடியுமா? கண்ணன் சூரியனைச் சக்கரம் கொண்டு மறைத்தானே. சூரியனையும் மங்கச் செய்யும் சுடர் தானே தோற்றமாய் - அர்ச்சையாய் நின்ற சுடர். இந்தச் சுடரை மனத்தில் வைத்து, ஞான ஒளி பெருகி, உன் சரணன்றி வேறு சரண் இல்லை என சரணாகதி பண்ண 'போற்றி யாம் வந்தோம்' என்று சொல்லி, உலகினில் தோற்றமாய் நின்ற சுடரான கண்ணனை கோதா பிராட்டி எழுப்புகிறாள் என்று அனுபவிக்கலாம்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.