| ADDED : அக் 22, 2025 06:54 AM
புதுச்சேரி: அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா கொடுக்க வேண்டுமென கேட்ட பா.ஜ., தலைவர்களிடம் முதல்வர் ரங்கசாமி டென்ஷனுடன் சரமாரியாக கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி என்.ஆர்.காங்., - பா.ஜ., கூட்டணி ஆட்சியில் பா.ஜ.,அமைச்சர் சாய்சரவணன்குமார் பதவி பறிக்கப்பட்டு, ஜான்குமார் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர், ஜூலை 15ம் தேதி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். வழக்கமாக அமைச்சர் பதவி ஏற்ற பின், மாலையில் புதிய அமைச்சருக்கு இலாகா ஒதுக்கப்படும். ஆனால் ஜான்குமார் பதவி ஏற்று பல மாதங்கள் உருண்டோடியும் அவருக்கு இலாகா ஒதுக்கப்படவில்லை. அண்மையில் பா.ஜ.,வின் முக்கிய தலைவர்கள் முதல்வர் ரங்கசாமியை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். அனைவரையும் வரவேற்ற முதல்வர் ரங்கசாமி, அப்படியே என்ன விஷயம் என, கேட்டார். அப்போது பா.ஜ., தலைவர்கள், சட்டசபை தேர்தல் நெருங்குகிறது. அமைச்சர் ஜான்குமாருக்கு இலாகா ஒதுக்க வேண்டும். தேர்தலை சந்திக்கவும் நமக்கு சுலபமாக இருக்கும் என, தெரிவித்தனர். அதை கேட்டதும் முதல்வர் ரங்கசாமி கடும் டென்ஷன் அடைந்தார். 'அது சரி... ஜான்குமார் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பதை முதலில் சொல்லுங்கள்... அவர் பா.ஜ.,வில் இருக்கிறாரா அல்லது ஜே.சி.எம்.,-ல் இருக்கிறாரா... அவர் நமது கூட்டணி அரசுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்;நீங்கள் ஏதும் கேட்பதில்லை. அப்படி பார்த்தால் அவரை அமைச்சர் பதவியில் இருந்து தான் நீக்க வேண்டும். அதற்காக நான் லெட்டர் கொடுக்கலாம் என இருக்கிறேன் என்று கொந்தளித்தார். முதலில் பா.ஜ., மேலிடத்தில் இருந்து என்னிடம் பேச சொல்லுங்கள். நான் நேரடியாக பேசிக்கொள்கிறேன். அல்லது நீங்களே ஜான்குமார் எந்த கட்சியில் இருக்கிறார் என, கட்சி மேலிடத்திடம் கேட்டுவிட்டு வாங்க. அப்புறம் இலாகா பற்றி முடிவு செய்யலாம் என, எகிறினார். முதல்வரின் கோபத்தை கண்ட பா.ஜ., தலைவர்கள், கட்சி மேலிடத்தின் கவனத்திற்கு கொண்டு செல் வதாக விடைபெற்றனர்.