நுால் வெளியீட்டு விழா
புதுச்சேரி: கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவை சார்பில், நூல் வெளியீட்டு விழா புதுவை தமிழ்சங்கத்தில் நடந்தது. தமிழ்மாமணி துரை மாலிறையன் தலைமை தாங்கினார். பாவலர் பொன்வாணி ஜானகிராமன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கலைப் பண்பாட்டுத்துறை அமைச்சர் ராஜவேலு பங்கேற்று, முருகன் எழுதிய ‘கொடுத்து பழகுவோம்’ எனும் நுாலை வெளியிட, பொன்னுசாமி பெற்றுக் கொண்டார். தேசிய நல்லாசிரியர் முருகேசன் நுாலினை ஆய்வுசெய்தார். ‘மரபு பிறந்ததடா’ நுாலினை கலைமாமணி வேணுகோபால் ஆய்வு செய்து வெளியிட பாவலர் பொன்வாணி ஜானகிராமன் பெற்றுக் கொண்டார். ‘இனிக்கும் பாட்டு பாடுவோம்’ நுாலினை கலைமாமணி கோவிந்தராசு வெளியிட ஜானகிராமன் பெற்றுக் கொண்டார். அனைத்து உலக பொங்கு தமிழ்ச் சங்கத்தின் தலைவர் சுந்தர பழனியப்பன், கலைமாமணி பத்மநாபன், புதுச்சேரி மாநில முத்தமிழ் கழகத்தின் நிறுவனர் சண்முகசுந்தரம், திருவள்ளுவர் உலக சாதனையாளர் அமைப்பின் தலைவர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிஞரேறு வாணிதாசனார் விருது, ஆசிரியர் செம்மல் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் தமிழ் அறிஞர், ஆசிரியர், சமூக சேவகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தமிழ்க்குமரன் ஏற்புரை வழங்கினார். நல்லாசிரியர் கெஜலட்சுமி இணைப்புரை வழங்கினார். நல்லாசிரியர் வளர்மதி முருகன் நன்றி கூறினார்.