உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு

இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்டிற்கு பிறந்தது... விடிவு காலம்; உழவர்கரை நகராட்சி மூலம் கட்ட முடிவு

புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தினை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், 31 கோடி ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் புனரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.அதே நேரத்தில், 15.45 கோடி ரூபாய் செலவில் இ.சி.ஆரில் உழவர்கரை நகராட்சி நவீன மார்க்கெட்டினையொட்டி, கொண்டுவரப்படும் என தடபுடலாக அறிவிக்கப்பட்ட இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் அமைக்கும் திட்டம் கிடப்பில்போடப்பட்டு அப்படியே கிடக்கின்றது. பஸ் ஸ்டாண்ட் அமைப்பதற்காக கிரவல்மண் கொட்டியதோடு புதராக அப்படியே கிடக்கின்றது.

என்ன காரணம்

புதுச்சேரி நகராட்சியின் 23 வார்டுகள் உள்ளடங்கிய ஏரியாவில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது.ஆனால் இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட்டிற்கான இடம், இந்த ஸ்மார்ட் சிட்டி ஏரியாவை தாண்டி உள்ளதால் நவீன பஸ் ஸ்டாண்ட் அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இது தொடர்பாக அப்போதைய தலைமை செயலர்கள் அஸ்வனிகுமார்,ராஜிவ்வர்மாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.ஸ்மார்ட் சிட்டி ஏரியாவை தாண்டி இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த இரு தலைமை செயலர்களும் மாற்றலாகி சென்றநிலையில்,ஸ்மார்ட் சிட்டி நிறுவனமும் தற்போது இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் நிதி கொடுப்பதில் இருந்து முழுவதுமாக விலகி கொண்டுவிட்டது.இதன் காரணமாகவே இ.சி.ஆர் பஸ்டாண்ட் கைவிடப்பட்டுள்ளது.

முதல்வர் தீவிரம்

இதற்கிடையில், இ.சி.ஆர்., பஸ் ஸ்டாண்ட் திட்டத்தில் இருந்து ஸ்மார்ட் சிட்டி விலகி கொண்ட சூழ்நிலையில்,புதுச்சேரி அரசே உழவர்கரை நகராட்சி மூலமாக கட்ட முடிவு செய்துள்ளது.இந்த திட்டத்திற்கு நிதி கேட்டு,உழவர்கரை நகராட்சி தற்போது கோப்பு அனுப்பியுள்ளது.பட்ஜெட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டதும், உடனடியாக இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் கட்ட டெண்டர் விட முடிவு செய்துள்ளது. நகர நெரிசலை குறைக்கும் வகையில் இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் கொண்டு வருவதில் முதல்வர் ரங்கசாமி ஆர்வமாக உள்ளார்.நேரில் சென்று பலமுறை ஆய்வு நடத்தியுள்ளார்.எனவே நிதி ஒதுக்குவதில் பிரச்னை இருக்காது என்பதால், விரைவில் இ.சி.ஆர் பஸ் ஸ்டாண்ட் பணிகள் துவங்க உள்ளது.

இப்படி யோசித்து இருக்கலாம்

ஸ்மார்ட் சிட்டி எல்லைக்குள் வசிக்கும் மக்களுக்காக வேறு ஒரு பகுதியில் போர்வெல் அல்லது மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கலாம் என்று விதிமுறை சொல்லுகின்றது. அப்படி பார்க்கும்போது ஸ்மார்ட் சிட்டி ஏரியாவில் வசிக்கும் மக்களுக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இ.சி.ஆரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படுகிறது என்று விதிமுறைகளை சுட்டி காட்டி,புதுச்சேரி அரசு மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தால்,இப்பிரச்னையை முடிவு எட்டப்பட்டு இருக்கும்.15 கோடி நிதியும் மிச்சமாகி இருக்கும். ஆனால்,புதுச்சேரி அரசு தவறியதால் இப்போது நிதி சுமையை புதுச்சேரி அரசே ஏற்க வேண்டிய நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை