| ADDED : பிப் 01, 2024 05:01 AM
புதுச்சேரி; சிறையில் உள்ள ரவுடி பெயரை கூறி, புதுச்சேரி நகை கடை அதிபரிடம் ரூ. 5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுச்சேரி பாரதி வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ், 55; பாரதி வீதியில் நகை கடை நடத்தி வருகிறார். அதே தெருவில் இவரது மனைவி பெயரில் உள்ள இரு கடைகளை, ரவிச்சந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். ரமேஷின் நகை கடை மற்றும் வாடகைக்கு உள்ள இரு கடைகளை தன் பெயரில் எழுதி கொடுக்க வாடகைதாரர் ரவிச்சந்திரனும், அவரது மகனும் ரமேஷிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை 11:00 மணிக்கு, ரமேஷ் மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் மர்டர் மணிகண்டன் எனவும், என்னுடைய ஆள் வீட்டு அருகில் நிற்கிறார். அவர்கள் வந்து உன்னை பார்ப்பார்கள். அவர்களிடம் ரூ. 5 லட்சம் கொடுத்து அனுப்பு என கூறியுள்ளார்.ஏன் கொடுக்க வேண்டும் என ரமேஷ் கேட்டார். அதற்கு, ஏன் சம்பவம் செய்தால் தான் கொடுப்பீர்களா என கூறிவிட்டு மொபைல் போனை அனைத்து விட்டார். சில நிமிடம் கழித்து மீண்டும் போன் வந்தது. ஆனால் ரமேஷ் போனை எடுக்கவில்லை.ரமேஷ், தனக்கும் தன் குடும்பத்திற்கு உயிர் பாதுகாப்பு அளிக்குமாறு பெரியக்கடை போலீசில் புகார் அளித்தார். போலீசார் மிரட்டல் வழக்கு பதிவு செய்து, ரமேஷ் மொபைல் போனுக்கு அழைப்பு விடுத்தது சிறையில் உள்ள மர்டர் மணிகண்டனா அல்லது வேறு யாரேனும் மிரட்டல் விடுத்தார்களா என விசாரித்து வருகின்றனர்.சிறையில் உள்ள ரவுடி மர்டர் மணிகண்டன் 10 நாள் விடுமுறைக்காக ஓரிரு நாட்களில் சிறையில் இருந்து வெளியே வர உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.