உள் ஒதுக்கீடு இல்லாத அரசு பணியிட அறிவிப்பு ரத்து! பொதுமக்கள் எதிர்ப்பால் கவர்னர், முதல்வர் அதிரடி
புதுச்சேரி : அரசியல் கட்சிகள், பொதுமக்களின்எதிர்ப்பினை தொடர்ந்து உள் ஒதுக்கீடுஇல்லாத ஒன்பது அரசு பணியிடங்களின்அறிவிப்பு அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள துறைமுக இளநிலைப் பொறியாளர் உள்பட 9 அரசுத் துறைகளில் மொத்தம் 180 அரசிதழ் பதிவு பெறாத குரூப்- பி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை கடந்த 2022ம் ஆண்டு வெளியிடப்பட்டது.இதில் புதுச்சேரியில் நடைமுறையில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 18 சதவீதம், மிக மிக பிற்படுத்தப்பட்டோர் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் 2 சதவீதம், பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 0.5 சதவீதம் ஆகிய வகுப்பினருக்கான உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் போராடியதன் விளைவாக 2023ல் அரசிதழ் பதிவு பெறாத குரூப்- பி பணியிடங்களில் இடஒதுக்கீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. கடும் எதிர்ப்பு
ஆனாலும், இந்த 9 அரசு துறைகளுக்கான 180 சான்றிதழ் பதிவு பெறாத பணிடங்களை நிரப்புவதில் மட்டும் இச்சமூகங்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத் துறை திட்டவட்டமாக மறுத்து புதிய அறிவிப்பாணை வெளியிட்டது.இது கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியது. இந்த அறிவிப்பு சட்ட விரோதமட்டுமின்றி, சமூக நீதிக்கு எதிரானது. அரசிதழ் பதிவு பெறாத குரூப்--பி பணியிடங்களில் இடஒதுக்கீடு மறுத்து வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என, அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது சட்டசபை கூட்ட தொடரிலும் எம்.எல்.ஏ.,க்கள் மூலம் எதிரொலித்தது. முதல்வர் அறிவிப்பு
அப்போது முதல்வர் ரங்கசாமி, அனைத்து தரப்பினர்களிடம் இருந்து வந்த கோரிக்கைகளை உள்ஒதுக்கீடு இல்லாத அரசு பணியிட அறிவிப்பினை ரத்து செய்யப்படும். எம்.பி.சி., மீனவர், முஸ்லிம், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உள் ஒதுக்கிடு வழங்கி புதிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், முதல்வரின் அறிவிப்பிற்கு நிர்வாக சீர்திருத்த துறை செயல்வடிவம் கொடுத்துள்ளது. உள் ஒதுக்கீடு இல்லாத குரூப்-பி அரசிதழ் பதிவு பெறாத ஒன்பது அரசு பணியிட அறிவிப்பு கவர்னர்கைலாஷ்நாதன் ஒப்புதலுடன் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.கடந்த 2023ம் ஆண்டு மார்ச் 15ம் தேதி சமூக நலத் துறை வெளியிடப்பட்ட இட ஒதுக்கீடு அடிப்படையில் இனி, இந்த 9 அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினை நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார். அடுத்தது என்ன
உள்ஒதுக்கீடு இல்லாத 9 அரசு பணியிடங்களின் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதால், இந்த ஒன்பது அரசு துறைகளும் விரைவில் புதிய விண்ணப்ப வரவேற்பு அறிவிப்பினை வெளியிட வேண்டும். இது தொடர்பாக அந்தந்த அரசு துறைகளுக்கு சுற்றிக்கை மூலம் நிர்வாக சீர்திருத்த துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு உள்ஒதுக்கீட்டினை எதிர்பார்த்திருந்த அச்சமூகங்கள், இளைஞர்கள் மத்தியில் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
குரூப் - பி அரசிதழ் பதிவு பெறாத அரசு பணியிடங்களை பொருத்தவரை உள் ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை. கொள்கை முடிவு எடுத்து மாநில அரசே முடிவு செய்துள்ள கொள்ளலாம். ஆனால் குரூப்-பி பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டதை கண்ட புதுச்சேரி அரசு ஓ.பி.சி., பிரிவில் உள் ஒதுக்கீடு இல்லாமல் மொத்தமாக 33 சதவீதம் என்று அறிவித்து கடந்த 2022ம் ஆண்டு அவசர அவசரமாக அறிவிப்பு வெளியிட்டு விட்டது. கடும் எதிர்ப்பு ஏற்பட்டதை தொடர்ந்து இப்போது கொள்கை முடிவு செய்து, உள் ஒதுக்கீட்டினை அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.