உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / டாப் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு! பள்ளி கல்வித் துறை மீண்டும் முடிவு

டாப் அரசு பள்ளி மாணவர்களுக்கு ரொக்க பரிசு! பள்ளி கல்வித் துறை மீண்டும் முடிவு

புதுச்சேரி மாநிலத்தில் 297 தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப்பள்ளிகள், 72 உயர்நிலை, 67 மேல்நிலைப் பள்ளிகள்,1 ஜூனியர் கல்லுாரிகள் என, 422 அரசுப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.இப்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும், கல்வித்தரத்தை மேம்படுத்தவும், அரசு பல்வேறு நலத்திட்டங்களுடன் கூடிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இலவச சீருடை, பென்சில், நோட்டு புத்தகங்கள், காலணிகள் போன்றவை மட்டும் இன்றி ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஆங்கில வழிக்கல்வி, கணினி வழி கல்வி போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்திற்கு மாறிய பிறகு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கனிசமாக அதிகரித்துள்ளது.இதனால் உற்சாகமடைந்துள்ள பள்ளி கல்வித் துறை, நீண்ட காலமாக முடங்கியுள்ள திட்டங்களையும் துாசி தட்டி மீண்டும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக,முதல்வர், கல்வி அமைச்சர் உத்தரவின்பேரில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு மீண்டும் ரொக்கப் பரிசு கல்வி ஊக்கத் தொகை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து கவர்னருக்கு கோப்பு அனுப்பியது. இத்திட்டத்திற்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

எவ்வளவு பரிசுதொகை

பிராந்திய ரீதியாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து டாப் இடத்தினை பிடிக்கும் மாணவர்களுக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக 15 ஆயிரம் ரூபாய், மூன்றாம் பரிசாக 10 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்.இதேபோல், பாடவாரியாக சென்டம் எடுக்கும் மாணவர்களுக்கு முதல் முறையாக 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பரிசு திட்டமும் செயல்படுத்த உள்ளது. தற்போது பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கும் ரொக்கப் பரிசு திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

அதிகரிக்கப்படுமா?

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களை ஊக்கப்படுத்த ரொக்க பரிசு திட்டம் செயல்படுத்த கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி, புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.அப்போது அரசுப் பள்ளி மற்றும் தனியார் பள்ளிக்கு தனியே செயல்படுத்தப்படும் எனவும் அறிவித்தது. அதுமட்டுமின்றி முதல் பரிசாக 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக 30 ஆயிரம், மூன்றாம் பரிசாக 20 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசினை அறிவித்தது.ஆனால் தற்போது ரொக்கப் பரிசு திட்டம் 20 ஆயிரம், 15 ஆயிரம், 10 ஆயிரம் என, குறைத்து மாற்றி அறிவித்துள்ளது.எனவே கடந்த காலங்களை போன்றே அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ரொக்க பரிசினை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை