காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
காரைக்காலில் இந்திய கடலோர காவல்படை சார்பில், புதிய ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு சொந்தமான புதிய 'அக் ஷர்' என்கின்ற ரோந்து கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா மற்றும் ரோந்து பணி தொடக்க விழா நேற்று தனியார் துறைமுகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் தீப்தி மோஹில் சாவ்லா தலைமை தாங்கி, அக் ஷர் கப்பல் ரோந்து பணியை துவக்கி வைத்தார். கலெக்டர் ரவி பிரகாஷ் முன்னிலை வகித்தார். இந்த புதிய 'அக் ஷர்' ரோந்து கப்பல் கடல் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்காக கோவா மாநிலத்தில் உள்ள கப்பல் தயாரிக்கும் நிறுவனம் மூலம் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ், இந்தியாவின் கடல் பாதுகாப்பை வலுப்படுத்த உருவாக்கப்பட்டது. கப்பல் 51 மீட்டர் நீளம், 320 டன் எடை, இரண்டு 3000 KW டீசல் இன்ஜின்கள் கொண்ட இந்த ரோந்து கப்பல் 27 நாட்டிக்கல் மைல் வேகத்தில் செல்லக்கூடியது. CRN-91 துப்பாக்கி மற்றும் இரண்டு ரிமோட் கண்ட்ரோல்ட் இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கப்பலில் கமாண்டர் சுபேந்து சக்ர போர்டி தலைமையிலான 5 அதிகாரிகளும், 33 படையினரும் பணியாற்ற உள்ளனர்.ரோந்து கப்பல் காரைக்கால் மாவட்ட கடல் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு மற்றும் மீட்பு பணியில் ஈடுபட உள்ளது. இதன் மூலம் சட்டவிரோத செயல்களை தடுக்க முடியும். மேலும் நடுக்கடலில் மீட்பு பணிக்காகவும் இக்கப்பல் பயன்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில்கடலோர காவல்படை கூடுதல் இயக்குநர் ஜெனரல் டோனி மைக்கேல், சீனியர் எஸ்.பி., லட்சுமி சவுஜன்யா, நாகை மாவட்ட எஸ்.பி., செல்வகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.