உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புயல், மழை பாதிப்புகள் குறித்து...  கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

புயல், மழை பாதிப்புகள் குறித்து...  கணக்கெடுப்பு; அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு

புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 'டிட்வா' புயல், மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுப்பு நடத்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வங்கக் கடலில் இலங்கை அருகே நிலவிய 'டிட்வா' புயல் கடந்த 28ம் தேதி தமிழக கடற்கரை நோக்கி நகரத் தொடங்கியது முதல் புதுச்சேரியில் மழை பெய்ய துவங்கியது. அதில், அன்று 1 செ.மீ., அளவிற்கு மழை பெய்தது. இந்நிலையில் புயல் நேற்று முன்தினம் மாலை வேதாரண்யம் அருகே நிலை கொண்டதை தொடர்ந்து புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை தீவிரமடைந்தது. காரைக்காலில் கனமழை இதன் காரணமாக நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக காரைக்காலில் 19.43 செ.மீ., மழை பதிவானது. பாகூர் 8.1 செ.மீ., புதுச்சேரி 7.46; பத்துக்கண்ணு 6.3 மற்றும் திருக்கனுாரில் 4.2 செ.மீ., மழை பதிவானது. கடலரிப்பு தொடர் மழை மற்றும் புயல் கரையை நெருங்கியதன் காரணமாக கடல் சீற்றமாக காணப்பட்டது. 7 அடி முதல் 10 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பியது. கடல் சீற்றம் காரணமாக சின்னகாலாப்பட்டு குப்பம் கடற்கரையில் கடலரிப்பு ஏற்பட்டு, 70 அடி துாரத்திற்கு கடல் நீர் புகுந்தது. இதனால், அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தார்சாலையின் பெரும் பகுதி கடலில் அடித்து செல்லப்பட்டது. சாலைகள் சேதம் தொடர் மழை காரணமாக பிரதான சாலைகள், குடியிருப்பு பகுதி சாலைகள் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாகியது. குறிப்பாக நுாறடி சாலையில் இந்திரா சதுக்கம் பகுதியில் கடலுார் மார்க்க சாலை சந்திப்பு பகுதியிலும், ரயில்வே மேம்பாலம் மற்றும் கடலுார் சாலையில் பல்வேறு இடங்களில் மெகா பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். பயிர்கள் தத்தளிப்பு தொடர் மழை காரணமாக, மாநிலத்தின் நெற்களஞ்சியமான காரைக்கால் மற்றும் பாகூர் பகுதியில் சுமார் 7 ஆயிரம் ெஹக்டேர் பரப்பிலான நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். மழை தீவிரம் குறைந்தது இந்நிலையில், வேதாரண்யம் அருகே நிலைகொண்ட 'டிட்வா' புயல் வேகம் குறைந்து நேற்று காலை புதுச்சேரிக்கு 160 கி.மீ., தொலைவில் கடலை நோக்கி நகர்ந்து, அங்கிருந்து மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்தது. இதனால், நேற்று காலை முதல் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை தீவிர முற்றிலுமாக குறைந்தது. அதே நேரத்தில் சென்னையை நோக்கி நகர்ந்த புயல் புதுச்சேரியை நெருங்கியதால் மாலை 3:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை அவ்வப்போது லேசான மழை பெய்தது. முதல்வர் ஆய்வு தொடர் மழையை தொடர்ந்து முதல்வர் ரங்கசாமி காரில் சென்று நகரின் பிரதான பகுதிகளை பார்வையிட்டு, அங்கிருந்த அதிகாரிகளிடம் நிலமைகளை கேட்டறிந்தார். இறுதியாக கடற்கரை சாலையில் ஆய்வு செய்த முதல்வர், அங்கிருந்த கலெக்டரிடம் மழை நிலவரம் மற்றும் மீட்பு பணிகளை கேட்டறிந்தார். அவர், கூறுகையில், 'மழையால் ஏற்பட்டுள்ள அனைத்து வகை பாதிப்புகளையும் கணக்கெடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு விபரம் வந்த பின், நிவாரணம் வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி