ரூ.3.16 கோடி நலத்திட்ட உதவி முதல்வர் ரங்கசாமி வழங்கல்
புதுச்சேரி : புதுச்சேரி ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், 113 ஏழை மணமகளின் பெற்றோருக்கு திருமண உதவி தொகை திட்டத்தில் தலா 1 லட்சம் ரூபாய் உதவித் தொகை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.புதுச்சேரி முதல்வர் அலுவலத்தில் ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நலத்திட்ட உதவிகள் வழங்கல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முதல்வர் ரங்கசாமி, ஏழை மணமகளின் பெற்றோருக்கு தலா ஒரு லட்சம் வீதம் 113 பேருக்கு ரூ. 1.13 கோடி உதவி வழங்கினார். மேலும் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 3 ஆயிரம் ரூபாய் வீதம் 2,798 பேருக்கு 1 கோடியே 93 லட்சத்து, 48 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்டு இறந்த தமிழ்நாடு, கடலுார் மாவட்டம், வேலப்பாக்கம் லட்சுமி நகரைச் சேர்ந்த முத்து மனைவி விகிதாவிற்கு 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., துறை செயலர் முத்தம்மா, ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், லெபாஸ், கண்காணிப்பாளர் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.