| ADDED : ஜன 19, 2024 10:55 PM
புதுச்சேரி- பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தில், நேரு எம்.எல்.ஏ., தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர். உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு மூலம், உப்பனாறு வாய்க்கால் மேல் சாலை அமைக்கும் பணியை முழுமை பெற செய்ய வேண்டும், குளத்துமேட்டு வார்டு பகுதியில் புதிய சிமென்ட் சாலைகள் மற்றும் இருபுற வாய்க்கால் அமைக்கும் பணி மேற்கொள்ள வேண்டும் என நேரு எம்.எல்.ஏ., கேட்டுக் கொண்டார்.பொதுப்பணித் துறை நீர்பாசன கோட்ட பிரிவின் மூலம், உப்பனாறு வாய்க்கால் பகுதியில் இருபுறமும் கான்கிரீட் கட்டைகள் அமைக்க வேண்டும், உப்பனாற்றை ஒட்டிய தாழ்வான பகுதியான குபேர் நகர் மற்றும் நேரு நகர் பகுதிகளில் தேங்கும் மழை நீரை வெளியேற்ற உந்து நிலையங்கள் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.புதிய குடிநீர் குழாய்கள் அமைத்தல் மற்றும் ராஜா தியேட்டர் காமராஜர் சிலை முதல் உப்பனாறு வாய்க்கால் வரை உள்ள காமராஜர் சாலையில், புதிய பாதாள கழிவுநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும், உருளையன்பேட்டை பள்ளிகளில் மேம்படுத்த வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.