| ADDED : செப் 04, 2026 07:20 PM
புதுச்சேரி: வீதி நாடகம் வழியாக கனகசெட்டிக்குளத்தில் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மழைக் காலத்தை முன்னிட்டுப் பரவி வரும் கொசுக்கடியால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களிடையே தற்காப்பு நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் புதுச்சேரி அரசும் தன்னார்வ அமைப்புகளும் இணைந்து தீவிர விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி சுகாதாரத் துறை மற்றும் யாத்ரா கலை பண்பாட்டுச் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய டெங்கு விழிப்புணர்வு வீதி நாடகம், கனகசெட்டிக்குளத்தில் நடந்தது. மருத்துவர் பிரியதர்ஷினி, அப்பகுதிச் சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பொதுமக்களுக்கு கருத்துகளைக் கலை வடிவில் கொண்டு சேர்க்கும் நோக்கில், யாத்ரா கலை பண்பாட்டுச் சங்கத்தின் சார்பில், வீதி நாடகம் நடந்தது. நன்னீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் எவ்வாறு உற்பத்தியாகின்றன, வீட்டைச் சுற்றி நீர் தேங்காமல் தடுக்கும் முறைகள் எவை. டெங்கு மற்றும் மலேரியா போன்ற காய்ச்சல்களிலிருந்து குடும்பத்தைப் பாதுகாப்பது எப்படி ஆகிய முக்கியக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடகம் அமைந்திருந்தது. நாடகத்தைக் கண்டு ரசித்த அப்பகுதி பொதுமக்கள், கொசு உற்பத்தியைத் தடுப்பதற்கானப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பின்பற்றுவதாக உறுதிபூண்டனர். இவ்விழிப்புணர்வு முகாமில் காலாப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த சுகாதார அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனர். விழிப்புணர்வு நாடகத்தை எழுதி இயக்கிய கலைஞர் ஸ்ரீநிவாசன் கவுரவிக்கப்பட்டார்.