| ADDED : செப் 07, 2026 10:55 PM
பாகூர்: பாகூர் மற்றும் பரிக்கல்பட்டு கிராமத்தில், 69 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய் செலவில் பல்வேறு மேம்பாட்டு பணிகளை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், பாகூர் தொகுதிக்குப்பட்ட கீழ்பரிக்கல்பட்டு கிராமத்தில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலமாக 35 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் செலவில், தாய் சேய் துணை நிலையத்திற்கு கட்டடம் அமைத்தல், பரிக்கல்பட்டு கிராமத்தில் 21 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில், வடிகால் வாய்க்கால், பாகூர் அபிராமி நகர், லட்சுமி நகரில் 12 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில், சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், உதவி பொறியாளர் பாலமுருகன், முன்னாள் எம்.எல்.ஏ., தங்க விக்ரமன், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆனந்தவேல் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.