அழகிய தமிழ் மொழி மேடை ஏறிய, ஆந்திர சுகாதார அமைச்சர் சத்ய குமார் யாதவ், ‘தமிழ் அழகான மொழி. ஆனால் என்னால் தமிழில் பேச முடியாது. எனக்கு தமிழ் புரியும். ஆனால் பேச முடியாது. நான் பேசினால், உங்களுக்கு புரியாது. அப்புறம் நீங்கள் தமிழையே மறந்து விடுவீர்கள். அதனால் நான் கொஞ்சம் ஆங்கிலத்தில் பேசுகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். இல்லையென்றால், உங்களுக்கு விருப்பமென்றால், நான் தெலுங்கிலும் பேச முடியும்’ என்றார். அப்போது அரங்கம் சிரிப்பலையால் நிரம்பியது. அமைச்சர் லக..லக.. ‘பாரத மாதா கி...’ என பேச்சை துவங்கிய அமைச்சர் சத்ய குமார் யாதவ், மாணவர்களை பார்த்து, ‘நான் பேசுவது கேட்கிறதா?’ என்றார். அடுத்து ‘நான் தெளிவாக தெரிகிறேனா’என்றார். இதனால் மாணவர்கள் திகைத்தனர். இதற்கு பதிலளித்தவர், ‘எனக்கு ஒரு சந்தேகம். மேடை மிகவும் உயரமாக இருந்ததால், நான் உயரக் குறைவு என்பதால், சரியாக தெரிய மாட்டேன் என, நினைத்தேன்’ என்று அவர் சொல்ல, அந்த இடமே கலகலப்பானது. எனக்கு மிகவும் பிடித்தது அமைச்சர் சத்யகுமார் யாதவ் பேசும் போது, ‘நான் உள்ளே நுழையும் போதே, இந்த பள்ளி வளாகத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அழகான குழந்தைகளின் உலா, வளாகத்தின் துாய்மை, ஆசிரியர்களின் நட்புணர்வு, மற்றும் ஒழுக்கமான மாணவர்கள் என அனைத்தும் அருமை. இதை தவிர, எனக்கு மிகவும் பிடித்தது, எங்களுக்கு துண்டுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது தான். பொதுவாக, அரசியல்வாதிகளான நாங்கள் எங்கு சென்றாலும், உண்மையில் எனது மாநில தலைவர்களிடம் கூட இதை சொல்ல நினைத்தேன். நான் புதுச்சேரிக்கு வந்தபோது, பல விலையுயர்ந்த சால்வை உள்ளிட்ட பொன்னாடைகளைப் போர்த்தி என்னை வரவேற்றனர். ஆனால், நான் எப்போதும் மக்களிடம் பொன்னாடைகளுக்கு பதிலாக துண்டுகளை வழங்க வேண்டுகோள் விடுத்து வருகிறேன்,’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘பொன்னாடைகள் மிகவும் விலையுயர்ந்தவை. அவை ரூ.500 முதல் ரூ.1,000 வரை செலவாகும். ஒருவேளை எனக்கு ஒரு நாளைக்கு, 20 துண்டுகள் கிடைத்தால், ஒரு மாதத்தில் அது 600 துண்டுகளாகிவிடும். அவற்றை, பிற்படுத்தப்பட்டோர் நல விடுதி, ஆதிதிராவிடர் நல விடுதிகளுக்கு வழங்க முடியும். வசதியற்ற மாணவர்கள் அந்த துண்டுகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஏனெனில் நானும் அந்த நிலையிலிருந்துதான் வளர்ந்து வந்தேன். நான் ஒரு எளிமையான பின்னணியில் இருந்து வந்தவன். நான் ஒரு பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியில்தான் தங்கி படித்தேன். ஒரு துண்டு வாங்குவது எவ்வளவு கடினம் என்பது எனக்கு தெரியும். எனவே எனக்கு இது மிகவும் பிடித்திருந்தது, ஏனெனில் பொன்னாடைகள் அல்லது விலையுயர்ந்த பரிசுகளுக்குப் பதிலாக துண்டுகளை வழங்கும் நிகழச்சியை நான் முதன்முறையாகப் பார்க்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள், ’என்றார்.