தமிழர்களின் பாரம்பரியமான கோலமிடும் வழக்கத்தை இளைய சமுதாயத்தினரிடையே கொண்டு செல்லும் வகையில், 'தினமலர்' நாளிதழ் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில், கோலப்போட்டி நடத்தி, பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இந்தாண்டு, சுற்றுலா துறை, ருசி பால் நிறுவனத்துடன்இணைந்து, புதுச்சேரி கடற்கரை சாலையில் நேற்று மெகா கோலப்போட்டி பிரமாண்டமாக நடத்தப்பட்டது. கடலும் கைவண்ணமும்... காலை 5:30 மணிக்கு போட்டி துவங்குவதாக அறிவிக்கப்பட்டாலும், கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் அதிகாலை 4:00 மணிக்கே மகளிர்கள் வருகை துவங்கி விட்டது.குடும்பத்துடன், குழந்தைகளுடன், கையில் கோலப்பொடி பைகளுடன், முகங்களில் உற்சாகம் நிறைந்த சிரிப்புடன் அணியணியாக குவிந்தனர். ஜில்லென்று வீசும் பனிக்காற்று, உடலில் மெல்ல ஊர்ந்து குளிரூட்டினாலும், அவர்களின் கைவிரல்களில் கலைத் தீயே எரிந்தது.பதிவு செய்தவர்களின் முன்பதிவு கூப்பன்கள் சரிபார்க்கப்பட்டு, சிக்குக் கோலம், ரங்கோலி, டிசைன் கோலம் என போட்டி பிரிவுகளுக்கு அவர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டனர். அலைகளின் தாலாட்டில் கவுண்ட் டவுன் வங்கக் கடலின் அலைகள் தாலாட்டுப் பாடல் பாட, பனிக்காற்று மென்மையாக முகங்களை வருட, காலை 6.06மணிக்கு கவுண்ட் டவுன் ஒலித்த அந்தக் கணம்… கடற்கரை சாலை ஒரே நேரத்தில் ஒரு திறந்தவெளி கலை மேடையாக மாறியது. விரல்களில் பிறந்த ஓவியங்கள் போட்டி தொடங்கிய சில நிமிடங்களிலேயே, பெண்களின் கைவிரல்களில் இருந்து கோலப்பொடிகள் சரசரவென வழிந்தன. புள்ளிகளாக… கோடுகளாக…வளைவுகளாக… வட்டங்களாக… ஒவ்வொரு துளியும் தரையைத் தொடும் போதே ஒரு கதை தொடங்கியது. அந்த துளிகள் ஒன்றோடொன்று இணைந்து, நொடி நேரங்களில் அற்புதமான வடிவங்களாக மலர்ந்தன. ஒரு மணி நேரத்திற்குள், 4 க்கு 4 அடி பரப்புக்குள், விதவிதமான வடிவ கோலங்கள் உருவெடுத்தன. பார்ப்பவர்களின் கண்கள் விரிந்தன. “இப்படியும் கோலம் போட முடியுமா?” என்ற வியப்பு, எங்கும் ஒலித்தது. தரையில் மலர்ந்த அழகோவியங்கள் நுட்பம், வண்ணங்களின் சங்கமும் என ஒவ்வொரு கோலமும் ஒரு தனிக் கவிதை போல தரையில் தீட்டப்பட்டிருந்தது. கதிரவன் மெதுவாக கண் விழித்தாலும், பனிமேகங்கள் திரையிட்டு மறைக்க, கடற்கரை சாலை ஊட்டியை நினைவூட்டும் ரம்மிய சூழலில் மூழ்கியது. பொன்னொளியில் மின்னிய வண்ணக் கனவுகள் காலை 7.11 மணிக்கு போட்டி முடிவடைந்தபோது, கருமேகங்களுக்கு இடையில் கண்ணாமூச்சி விளையாடிய கதிரவன், ஒருவழியாக பனித்துளிகளைத் துளைத்து வெளிவந்தது. அவனது பொன்னொளி கடற்கரை சாலையில் படர்ந்ததும், தரையில் பூத்திருந்த கோலங்கள் அனைத்தும் அழகோவியங்களாக மாறின. பனியால் ஈரமான தரையில் வண்ணங்கள் மின்ன, கடற்கரை சாலை ஒரு திறந்தவெளி ஓவியக் கண்காட்சியாக 1.5 கி.மீ., தொலைவிற்குமாறி இருந்தது. உறவுகளின் உற்சாகம் தான் போட்ட கோலத்தின் மீது பெண்கள், தேர்ந்த ஓவியனைப் போல இறுதி நிறங்களைத் தூவி அழகை நிறைவு செய்தனர். அதைச் சுற்றி குழந்தைகள் குதுகலமாக ஓடி, கைதட்டி மகிழ்ந்தனர். இல்லத்தரசிகள் கோலமிட, உறவுகள் சுற்றி நின்று உற்சாகப்படுத்தினர். இது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. நடுவர்கள் ஆயிரம் முத்து கோலங்களில் சில முத்துகளை எடுத்து பரிசுக்குரியவையாக தர வேண்டும். இந்த சவாலான பணி நடுவர்கள் முன் வைக்கப்பட்டது.சிக்கு கோலத்தின் நடுவர்களாக கலைமாமணி மாலதி செல்வம், ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரிசகுந்தலா செயல்பட்டனர்.ரங்கோலி கோலத்திற்கு பாரதிதாசன் மகளிர் கல்லுாரி துணை பேராசிரியர் ராஜலட்சுமி, பாரதியார் பல்கலைக் கூட நடனத்துறை உதவி பேராசிரியர் பத்மபிரியாமூர்த்தி நடுவர்களாக பணியாற்றினர். டிசைன் கோலத்திற்கு பாரதியார் பல்கலை கூட நடன துறை உதவி பேராசிரியர் சண்முகசுந்தரி, துணை பேராசிரியர் கண்ணமங்கை பணியாற்றி சிறந்த கோலங்களை தேர்வு செய்து கொடுத்தனர். முதல் பரிசுகள் புள்ளிகள் இட்டு, சிக்கு கோலம் போடுவதே கடினம். ஆனால் சிக்குகோலத்தில் அமர்ந்த நிலையில் பெண் ஒருவர் மார்கழி கோலம் போடுவது போன்று மஞ்சள் பின்னணியில் வெளிப்படுத்திய முத்தியால்பேட்டை அங்காளம்மன்கோவில் தெருவை சேர்ந்தஎழிலரசி,42, ரங்கோலியில் அழகு வண்ணங்களை கலந்து பூக்களை பூக்கவிட்டு கண்களை விரிய வைத்தகதிர்காமம் குறள்வீதியை சேர்ந்த வசந்தா, பெண்கள் மீதானவன்கொடுமை தடுக்க வேண்டும் என்று டிசைன் கோலமிட்ட காண்போரை சிந்திக்கவும் வைத்ததட்டாஞ்சாவடி மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த விஜயலட்சுமிக்கு லட்சிய ஜனநாய கட்சி சார்பில் தலா ஒரு' டபுள்டோர் பிரிட்ஜ்' பரிசாக வழங்கப்பட்டது. அக்கட்சியின் நிறுவன தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பரிசு வழங்கி பாராட்டினார். இரண்டாம் பரிசு இதேபோல் புள்ளிக்கோலத்தில் உறுவையாறு மங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த சபிதா,28; ரங்கோலியில்லாஸ்பேட்டை முத்துலிங்க பேட்டை ஜீவானந்தம் தெருவை சேர்ந்தேஷாபனா 33, டிசைன் கோலத்தில் பழைய சாரம் சுப்பிரமணியம் கோவில் தெரு கவிபிரியாவிற்கு ,23, ஆகியோருக்கு இரண்டாம் பரிசாக சத்யா ஏஜென்சி தலா ஒரு வாஷிங் மிஷின்களை, அந்நிறுவனத்தின் புதுச்சேரி கிளை மேலாளர் கவுதம் வழங்கினார். மூன்றாம் பரிசு: மேலும் புள்ளிக்கோலத்தில் கதிர்காமம் தனராணி, ரங்கோலியில் முத்திரையர்பாளையம் ஸ்ரீதேவி, டிசைன் கோலத்தில் அரியாங்குப்பம் திவ்யா ஆகியோருக்குமூன்றாம் பரிசாக டி.வி., வழங்கப்பட்டது. அதனை காங்., மாநில செயலாளர் குமரன், மண்ணாடிப்பட்டு பா.ஜ., செயற்குழு உறுப்பினர்முத்தழகன், முத்தியால்பேட்டை தணிகாசலம் அறக்கட்டளை நிறுவனர் சிவக்குமார் வழங்கினர். இதேபோல் சிறப்பு பரிசாக இரண்டு தையல் இயந்திரம், பங்கேற்ற அனைவருக்கும் நான்கு பைகளில் பரிசு தொகுப்பு மற்றும் சிற்றுண்டி வழங்கப்பட்டது. 'தினமலர்' மெகா கோலப் போட்டி ஒரு போட்டியாக மட்டும் இல்லாமல், தமிழ் பாரம்பரியத்தின், பெண்களின் கைவண்ணத்தின், குடும்ப உறவுகளின் அழகிய கொண்டாட்டமாக அமைந்தது.