உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசாரின் வாக்குறுதியை ஏற்று ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை வாபஸ்

போலீசாரின் வாக்குறுதியை ஏற்று ஆட்டோ ஓட்டுனர்கள் முற்றுகை வாபஸ்

புதுச்சேரி : போலீசாரின் வாக்குறுதியை ஏற்று, இரு சக்கர வாகன வாடகை நிலையங்களை முற்றுகையிடும் போராட்டத்தை, ஆட்டோ ஓட்டுனர்கள் கைவிட்டனர். ஆட்டோ தொழிலை பாதிக்கும் வகையில், அனுமதியின்றி செயல்படும் இரு சக்கர வாகன வாடகை நிலையங்களைத் தடை செய்ய வலியுறுத்தி, புதுச்சேரி பிரதேச ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் (சி.ஐ.டியு.,) சார்பில், முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது. நூற்றுக்கணக்கான ஆட்டோக்களுடன் ஓட்டுனர்கள், உரிமையாளர்கள், பாலாஜி தியேட்டர் அருகில் நேற்று காலை திரண்டனர். மா. கம்யூ., தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் முருகன், சங்கத் தலைவர் ராஜாங்கம், பொதுச் செயலாளர் சீனுவாசன் ஆகியோர் தலைமையில், அம்பலத்தடையார் மடத்து வீதி மற்றும் மிஷன் வீதியில் செயல்படும் இரு சக்கர வாகன வாடகை நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆட்டோக்களுடன் ஊர்வலமாகச் செல்ல முயன்றனர். ஊர்வலத்திற்கு எஸ்.பி., சிவதாசன் அனுமதி மறுத்தார். இதனால், இருதரப்பிற்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருசக்கர வாகன வாடகை நிலையங்களைத் தடை செய்ய போலீசாருக்கு அதிகாரம் இல்லை. போக்குவரத்து அலுவலகம் இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும் என போலீசார் கூறினர். ஆர்.டி.ஓ.,விடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே ஆட்டோக்களுடன் ஆர்.டி.ஓ., அலுவலகம் நோக்கி ஊர்வலம் செல்லப் போவதாக சங்கத்தினர் கூறினர். இதையடுத்து, போக்குவரத்து எஸ்.பி., பழனிவேலு, பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கை குறித்து சீனியர் எஸ்.பி., சந்திரன் மற்றும் போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி தீர்வு காண உறுதி அளித்தார். இதையேற்று, முற்றுகை போராட்டத்தை ஆட்டோ ஓட்டுனர்கள் கைவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை