| ADDED : மார் 02, 2024 10:39 PM
புதுச்சேரியில் சைபர் கிரைம் மோசடிகள் புதிய புதிய விதங்களில் அரங்கேறி வருகிறது. இதில், பெரும்பாலும் படித்த பட்டதாரிகள் தான் அதிக அளவில்ஏமாந்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் மூழ்கி கிடக்கும் இத்தகைய நபர்கள், வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதை பத்திரிக்கைகள் மூலம் தெரிந்து கொள்வது கிடையாது.சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் பதிவிடும் பொய் தகவல்களை உண்மை என நம்பிக் கொண்டு உலா வரும் மேதாவிகளாக உள்ளனர். சமீபத்திய மோசடிகளில் ஏமாந்தவர்கள் 90 சதவீதம்பேர் பொறியியல் படித்த இன்ஜினியர்கள், எம்.டி., எம்.எஸ்., பயிலும் டாக்டர்கள், எம்.பி.ஏ., முடித்த பட்டதாரிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.இத்தகைய நபர்களை தொடர்பு கொள்ளும் மர்ம நபர்கள், நுனி நாக்கில் ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றனர். ஒரு நிறுவனத்தை நடத்தும் மனிதவள மேம்பாட்டு அதிகாரிபோல நடந்து கொள்கின்றனர். 'ஆங்கிலத்தில் பேசும் நபர்கள் பொய் பேச மாட்டார்கள்; உண்மையாக இருப்பார்கள்' என நம்பும் படித்த பட்டதாரிகள் எளிதில் ஏமாந்து விடுகின்றனர்.மர்ம நபரின் ஆசை வார்த்தைகளை மயங்கியும் நம்பியும் 'கசாப்புக் கடைக்கு செல்லும் ஆடுபோல' மர்ம நபர் கூறும் டாஸ்க்குகளை செய்து முடித்து, பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை செலுத்துகின்றனர். அதிக லாபம் கிடைப்பதுபோல் மர்ம நபர்கள் தயார் செய்து வைத்திருக்கும் ஆன்லைன்போர்டல்களை பார்த்து தனது நண்பர்களையும் அதில் முதலீடு செய்ய துாது விடுகின்றனர்.ஒரு கட்டத்திற்கு மேல், முதலீடு செய்த தன்னுடைய பணத்தை எடுக்க முடியாத நிலை வரும்போது, ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்க ஓடுகின்றனர். படித்த பட்டதாரிகள், பத்திரிக்கைகளை தினசரி வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டால் ஏமாறாமல் தப்பிக்கலாம்.