உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம்
புதுச்சேரி: உரிமம் இன்றி வாடகைக்கு விடப்படும் இரு சக்கர வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் எச்சரித்துள்ளார். அவரது, செய்திக்குறிப்பு; புதுச்சேரியின் பல பகுதிகளில் உரிமம் பெறாமல் இரு சக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக் ஷாக்கள் மற்றும் தனியார் சேவை வாகனங்களை, சிலர் வாடகைக்கு விடுவதாக தகவல் வந்துள்ளது. இது மோட்டார் வாகன சட்ட விதிகளுக்கு முரணானது. வாடகை வாகன அமைப்பை பற்றி அறிந்திறாத நபர்களும் ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களும் வாகனங்களை இயக்கும்போது விபத்து நேரிட்டால் காப்பீட்டு தொகை, அரசின் இலவச மருத்துவ சேவை பெறமுடியாது. இரு சக்கர வாகனங்கள், உரிமம் பெறாமல் வாடகைக்கு விடுவது மோட்டார் வாகனச் சட்டப்படி குற்றம். எனவே, இரு சக்கர வாகனங்களை உரிமம் பெற்ற பின்னரே இயக்க வேண்டும். மீறுவோர்களின் வாகனம் தடை செய்யப்பட்டு, மோட்டார் வாகன சட்ட பிரிவு 192 (A)ன்படி அபராதமாக 10,000 ரூபாய் வசூலிக்கப்படும்.