| ADDED : ஜன 09, 2024 07:12 AM
புதுச்சேரி : புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாம் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே உள்ளது. ஏனாமில் ஆண்டுதோறும் மக்கள் கலைவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கலை விழா மற்றும் மலர் காய், கனி கண்காட்சி பாலயோகி விளையாட்டு மைதானத்தில் கடந்த 6ம் தேதி துவங்கியது.விழாவை புதுச்சேரி அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி மல்லாடிகிருஷ்ணராவ் துவக்கி வைத்தார். மலர் கண்காட்சியில் பூக்களால் பறவைகள் உள்ளிட்ட உருவகங்கள் தத்ரூபமாக வடிமைக்கப்பட்டு இருந்தன. இந்த கண்காட்சியை ஏனாம் மற்றும் ஆந்திராவை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். விழாவில் சுற்றுலாத் துறை சார்பில், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் தினமும் நடத்தப்பட்டன. மூன்று நாட்களில் மொத்தம் 35 ஆயிரம் பேர் காய், கனி, மலர் கண்காட்சியை பார்வையிட்டனர்.நிறைவு விழா நேற்று நடந்தது. தொகுதி எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி சீனிவாஸ் அசோக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பங்கேற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் ஏனாம் மண்டல நிர்வாகி முனுசாமி, ஏனாம் நகராட்சி ஆணை யர் அருள்பிரகாசம், ஏனாம் எஸ்.பி., ரகுநாயகம், வேளாண் கூடுதல் துணை இயக்குனர் சிவசுப்ரமணியன் கலந்து கொண்டனர்.