உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலங்கை பிரச்னையில் அரசு மவுனம் : சட்டசபையில் அ.தி.மு.க., வெளிநடப்பு

இலங்கை பிரச்னையில் அரசு மவுனம் : சட்டசபையில் அ.தி.மு.க., வெளிநடப்பு

புதுச்சேரி : இலங்கை பிரச்னை தொடர்பாக, புதுச்சேரி சட்டசபையில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் நேற்று வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரி சட்டசபையில் நேற்று ஜீரோ நேரத்தில், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அன்பழகன் பேசியதாவது: கடந்த, 2009ல் நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில், ஈவு இரக்கமின்றி தமிழர்கள் மீது இனப்படுகொலை நடத்தியவர்களை, போர்க் குற்றவாளிகள் என அறிவிக்க, ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்தவும், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சமஉரிமை கிடைக்கும் வரை, இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என, மத்திய அரசை வற்புறுத்தியும், தமிழக சட்டசபையில் வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார்.

அதேபோன்று, புதுச்சேரி சட்டசபையிலும் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என, கவன ஈர்ப்பு தீர்மானம், ஒத்திவைப்பு தீர்மானம், சிறப்பு குறிப்பு போன்றவைகளைக் கொடுத்தும் எதையும் இந்த அரசு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாத நிலையில், இதுகுறித்து, ஜீரோ நேரத்தில் பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கு இப்போது பதில் கூறவில்லை என்றாலும், இதுபற்றிய தீர்மானம் கொண்டு வர ஏதாவது ஒரு தேதியை குறிப்பிடுங்கள். இதுகுறித்து அரசின் நிலைப்பாடு, கருத்து என்ன என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். தீர்மானம் நிறைவேற்றப் போகிறீர்களா... இல்லையா... தொடர்ந்து மவுனமாக இருப்பதைப் பார்க்கும்போது இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்வதுபோல் உள்ளது. இவ்வாறு அன்பழகன் பேசினார்.

அரசு தரப்பில் இருந்து எந்த பதிலும் வராததால், அரசைக் கண்டித்து, வெளிநடப்பு செய்வதாகக் கூறி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், ஓம்சக்தி சேகர், புருஷாத்தமன், பெரியசாமி, பாஸ்கர் ஆகிய அனைவரும், சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை