உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பெஞ்சல் புயலால் நிலத்தடி நீர் மட்டம்... உயர்கிறது; அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது

பெஞ்சல் புயலால் நிலத்தடி நீர் மட்டம்... உயர்கிறது; அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகிறது

புதுச்சேரி: பெஞ்சல் புயலை தொடர்ந்து பெய்த கனமழையினால், புதுச்சேரியில் ஏரி, குளம், படுகையணை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிவதால், நிலத்தடி நீர் மட்டம் கணிசமாக உயர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியின் ஆண்டு சராசரி மழையளவு 1319 மி.மீ ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை கணிக்க முடியாத புதிராக மாறி வருகிறது. கடந்த 2021 ம் ஆண்டு மொத்தமாக 94 நாட்கள் மழை நாட்களாக இருந்து, புதுச்சேரி பிராந்தியத்தில் 2561.6 மி.மீ.,மழையளவு கொட்டி நகரை தத்தளிக்க வைத்தது.மேலும், அது வரலாறு காணாத மழையாகவும் அமைந்தது. ஆனால், கடந்த 2022ம் ஆண்டு 1267 மி.மீ., கடந்தாண்டு 1,489.6 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.நடப்பாண்டில் இதுவரை 1686.8 மி.மீட்டர் மழை பெய்துள்ளது. இது ஆண்டின் மொத்த சராசரியைவிட்ட 367.8 மி.மீட்டர் அதிகமாகும்.குறிப்பாக பெஞ்சல் புயல் காரணமாக கடந்த 30ம் தேதி காலை 8:30 மணி முதல் மறுநாள் 1ம் தேதி காலை 8:30 மணிவரை அதாவது 24 மணி நேரத்தில் 48.4 செ.மீ., மழை கொட்டியது. புதுச்சேரியில் கடந்த 30 ஆண்டுகளில் இதுவே ஒரு நாளில் பெய்த அதிகப்பட்ச மழையாகும்.இதனால், பிராந்தியத்தில் உள்ள அனைத்து ஏரி, குளம் மற்றும் படுகை அணைகள் நிரம்பி வழிகிறது.

கடல் போல் ஏரிகள்:

புதுச்சேரியின் பெரிய ஏரிகளான ஊசுட்டேரியில் 3.50 மீட்டர் உயரத்திலும், பாகூர் ஏரியில் 3.60 மீட்டர் உயரத்திற்கும் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கின்றது. உபரி நீர் மதகுகள் வாயிலாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

ததும்பும் நீர்நிலைகள்

புதுச்சேரியில் மொத்தமுள்ள 84 ஏரிகளும் நிரம்பி வழிகின்றன. இவற்றில் முக்கிய ஏரிகளான காட்டேரிக்குப்பம் ஏரி, சுத்துக்கேணி பெரிய ஏரி, தொண்டமாநத்தம் வெள்ளேரி மற்றும் கடப்பேரி, முருங்கப்பாக்கம் ஏரி, உழந்தை ஏரி, அபிஷேகப்பாக்கம் ஏரி, மணமேடு ஏரி, கிருமாம்பாக்கம் ஏரி, உச்சிமேடு ஏரி, மேல்பரிக்கல்பட்டு ஏரி, அரங்கனுார் ஏரி, கனகன் ஏரி, வேல்ராம்பட்டு ஏரிகள் முழு கொள்ளவை எட்டி நிரம்பி வழிகின்றன.இவற்றில் வாதானுார் ஏரி, பண்டசோழநல்லுார் ஏரி, திருபுவனைபாளையம், கரையாம்புத்துார் உள்ளிட்ட 6 ஏரிகள் உடைந்து தண்ணீர் வெளியேறியது. மீதியுள்ள 78 ஏரிகள் முழு அளவில் தண்ணீர் நிரம்பியுள்ளது.

பரந்து விரிந்த படுகையணைகள்

மழைக்காலங்களில் தென்பெண்ணை மற்றும் சங்கராபரணி ஆறுகளில் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதற்காக 27 இடங்களில் படுகையணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 26 படுகையணைகளில் தண்ணீர் நிரம்பி பரந்து விரிந்து ரம்மியமாக காட்சியளிக்கின்றன. பிள்ளையார்குப்பம் படுகையணை உடைந்ததால் அங்கும் மட்டும் தண்ணீர் நிற்கவில்லை.

நிலத்தடி நீர் உயரும்

பெஞ்சல் புயலுக்கு முன்பாக ஏரி, குளங்களில் 30 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே தண்ணீர் இருப்பு இருந்தது.ஆனால் பெஞ்சல் புயலில் ஒரே நாளில் 48.4 செ.மீ., அளவிற்கு கொட்டி தீர்த்த கன மழையால் அனைத்து நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்யும் பணியை இப்போது மெல்ல துவங்கின.பல ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் உள்ள ஏரி குளங்களில் தற்போது 1599.88 மில்லியன் கன அடி கொள்ளவிற்கு தண்ணீர் ததும்பி நிற்கின்றது. அதாவது 45.28 மில்லியன் கன மீட்டர் அளவிற்கு, தண்ணீர் ஏரி, குளங்களில் சேமிக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு நிலத்தடி நீர் மட்டம் அனைத்து பகுதிகளிலும் பல மடங்காக உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி