| ADDED : மார் 02, 2024 10:40 PM
உங்கள் வங்கி கணக்குக்கு தவறுதலாக பணம் அனுப்பிவிட்டேன். அதனை திருப்பி அனுப்புங்கள் என இணைய மோசடி கும்பல் வலை விரித்து வருகின்றது.தள்ளுவண்டியில் துவங்கி ஷாப்பிங் மால்கள் வரை கூகுள் பே உள்ளிட்ட பேமெண்ட் செயலிகள், வாழ்வின் ஒரு அங்கமாக மாறிவிட்டது. தினமும் லட்சக்கணக்கானோர் பேமெண்ட் செயலிகள் வாயிலாக பரிவர்த்தனைகள் மேற்கொண்டு வரும் நிலையில், இந்த பேமெண்ட் செயலிகளை குறி வைத்து புதுச்சேரியில் அண்மை காலமாக இணைய மோசடி கும்பல் பணம் பறிப்பதற்காக வலை விரித்து வருகின்றது.குறிப்பாக, உங்கள் கணக்குக்கு தவறுதலாக 2,000 ரூபாய் அனுப்பிவிட்டேன். அதனைதிருப்பி அனுப்புங்கள் என, இணைய மோசடி கும்பல் பரிதாபமாக பேசி, வலை விரித்து வருகின்றது.இதில் சிக்கினால் உங்கள் பணம் வங்கி கணக்கில் இருந்து காணாமல்போய்விடும். இவ்விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும் என சைபர்கிரைம் போலீசார் எச்சரித்து வருகின்றனர்.இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:முன்பின் தெரியாத யாரோ ஒருவர் தெரிந்தே உங்கள் வங்கிக் கணக்கிற்கோ அல்லது கூகுள் பேவிற்கோ பணம் அனுப்பியதை போன்று கிரின்ஷாட் அனுப்புவர். அதன்பிறகு சிறிது நேரத்தில் உங்களை தொடர்பு கொண்டு பணத்தை உங்கள் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பி விட்டதாகவும் அதை திருப்பி அளிக்குமாறு கவலையாகவும், கனிவாகவும் பேசுவர்.நீங்கள் பரிதாபப்பட்டு அவர் கூறியபடி அவரது கணக்கிற்கு பணத்தை அனுப்பினால் அவ்வளது தான் .மொத்த பணமும் மோசடி கும்பலால் திருடப்பட்டுவிடும்.உங்கள் வங்கி கணக்கும் ஹேக் செய்யப்படும். எனவே யாராவது உங்கள் கணக்கிற்கு தவறுதலாக பணம் அனுப்பியிருந்தால் அதை திருப்பி அனுப்பாமல் அந்த தொகையை கொண்டு சென்று காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். அடையாளச் சான்றுடன் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு வந்து பணமாக பெற்றுக்கொள்ளுமாறு கூற வேண்டும்.பேமெண்ட் செயலியான யூ.பி.ஐ., பரிவர்த்தனைகள் செய்பவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் அக்கவுண்டில் இருந்து பணத்தை மற்றொருவருக்கு அனுப்ப மட்டுமே பேமெண்ட் செயலி பின் எண்ணை பதிவிட வேண்டும்.மற்றொருவரிடம் இருந்து பணத்தை பெற பேமெண்ட் பின் எண்டண பதிவிட வேண்டியதில்லை. யாருக்காவது பணத்தை செலுத்துகிறீர்கள் என்றால் அவரின் பெயரை சரிபார்த்து பின்னர் அனுப்ப வேண்டும். பெயரை உறுதி செய்யாமல் மற்றவருக்கு பணம் அனுப்புவது ஆபத்தானது. அத்துடன் பின் எண்ணை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதனை வேறு யாருடனும் பகிர கூடாது.முக்கிய ஆப்ஷனாக உள்ள கியூ.ஆர் ஸ்கேனை பணத்தை செலுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணத்தை பெற கியூ.ஆர் ஸ்கேன் செய்ய தேவையில்லை. தெரியாத அல்லது அறிமுகம் இல்லாத நபர் கேட்கும்போது நம்முடைய யூ.பி.ஐ., ஷேர் செய்வது அல்லது தேவையற்ற ஆப்களை இன்ஸ்டால் செய்வதை தவிர்க்க வேண்டும்.ஏதேனும் ஆப்களை இன்ஸ்டால் செய்யுமாறு நமது போனுக்கு எதாவது எஸ்.எம்.எஸ்., வந்தால் அதனை தவிர்க்க வேண்டும். இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.