ஓட்டுகளை பணத்தால் வாங்க நினைத்தால்...
புதுச்சேரி: ஓட்டுகளை பணத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு புதுச்சேரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர் என, எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரியில் புதிய அவதாரம் எடுத்துக்கொண்டு ஒரு கூட்டம் மேடை ஏறி இருக்கிறது. புதுச்சேரியின் பாரம்பரியம், தன்மானம், சுய கவுரவத்தை குழிதோண்டி புதைக்க நினைக்கிறார்கள்.அரசியலுக்கும் புதுச்சேரிக்கும் சம்பந்தம் இல்லாதவரை அழைத்து வந்து மேடை ஏற்றி அவர்தான் எங்களின் அரசியல் வழிகாட்டி என்று சொல்வதும், மக்கள் பிரதிநிதி அவர் காலில் விழுவதும் அரசியல் நாகரீகம் அல்ல. இது தேர்ந்தெடுத்த மக்களுக்கு இழைக்கும் துரோகம்.வணிக அரசியலை மேடை ஏற்ற நினைக்கின்ற கோமாளித்தனமான செயலை மண்ணின் மைந்தர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். ஜனநாயகத்தில் ஓட்டு வங்கியை பணத்தால், இலவசத்தால் வாங்க நினைப்பவர்களுக்கு புதுச்சேரி மக்கள் தக்க பாடம் புகட்டுவர்.புதுச்சேரியை இண்டர் நேஷனல் சூதாட்ட களமாக்கவும், தடை செய்யப்பட்ட லாட்டரியை மீண்டும் கொண்டு வந்து படுபாதாளத்தில் தள்ளதிட்டமிட்டுள்ளனர். வரும் தேர்தலில் லாட்டரி கொள்ளைப் பணத்தை பல கோடி வாரி இறைத்து ஆட்சியை அந்நியருக்கு அடகுவைக்க சிவப்பு கம்பளம் விரித்துள்ளனர். அரசியல் சகுனி விளையாட்டுக்களை வெற்றி பாதை என, எண்ணி செயல்படும் ஆளும் கட்சி பி டீமின் செயல் புதுச்சேரி அரசியலையே கேலிகூத்தாக்கி உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.