உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., மனு

புதுச்சேரி: புதுச்சேரி சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, சட்டசபை செயலரிடம் சுயேச்சை எம்.எல்.ஏ., நேற்று மனு வழங்கியுள்ளார்.புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., நேரு, நேற்று காலை சட்டசபை செயலர் தயாளனை நேரில் சந்தித்து, சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி, மனு கொடுத்தார். பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:புதுச்சேரி சபாநாயகர், அப்பதவியின் புனித தன்மையை அவமதிக்கும் வகையில் செயல்படுகிறார். சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர் பதவியில் இருந்து என்னை நீக்கியதன் மூலம், அவர் பாகுபாட்டுடன் செயல்படுவதும், அவரது தனிப்பட்ட நோக்கத்தையும், பழிவாங்கும் தன்மையையும் வெளிப்படுத்துகிறது.சபாநாயகரின் போக்கு அரசியலமைப்பு சட்டத்தை மீறுவதாக உள்ளது. அமைச்சரவையின் பங்கை மீற முயற்சிக்கிறார். நிழல் முதல்வராக செயல்படுகிறார்.தற்போது, பொது கணக்கு குழு மற்றும் மதிப்பீட்டுக்குழு தலைவர் பதவியையும் அபகரித்து அரசியலமைப்புக்கு முரணாக செயல்பட்டு, தணிக்கை குழுவிற்கு தலைமை தாங்கியுள்ளார்.இதன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, முன்னோடியில்லாத எடுத்துக்காட்டை உருவாக்கி, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார். முக்கியமான அழைப்பிதழில் தனது படத்தை திணிக்க அரசியல் அமைப்புகளையும், அதிகாரிகளையும் வலியுறுத்துகிறார். இதன் மூலம், சபாநாயகர் பதவி தனது மதிப்பை இழந்துள்ளது.எனவே சபாநாயகர் மீது சட்டசபை நடைமுறை, நடத்தை விதிகளின்படி நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வர வேண்டி, சட்டசபை செயலரிடம் மனு அளித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

புதுச்சேரியில்

சபாநாயகர்கள் மாநாடுசபாநாயகர் செல்வம் மேலும் கூறுகையில், 'அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டை புதுச்சேரியில் நடத்த, பார்லிமென்ட் தலைவர் அனுமதி அளித்துள்ளார். இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

எனது அதிகாரத்தில் தலையிட

உச்சநீதிமன்றத்திற்கே அதிகாரமில்லைஇதுகுறித்து சபாநாயகர் செல்வம் கூறியதாவது:நான் சட்டசபை மாண்புகளை மதித்துதான் சபையை நடத்தி வருகிறேன். கடந்த மூன்றாண்டுகளில், சட்டசபையில் அதிக கேள்விகளுக்கு பதில் வாங்கி கொடுத்துள்ளேன்.சட்டவிதிகளுக்கு உட்பட்டே செயல்படுகிறேன். கடந்த 1963ல் வகுக்கப்பட்ட புதுச்சேரி சட்டத்தின்படி கவர்னர், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சபாநாயகர் பங்கேற்கலாம். இது சட்டப்படி உரிமை. இதை தடுக்க யாராலும் முடியாது. இந்த சட்டமாண்பு படி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இதற்கு முன் இருந்தவர்கள் இதை கடைபிடிக்கவில்லை.முதல்வர் அழைப்பின்பேரில் அவரது அறைக்கு செல்கிறேன். தேவையில்லாத விஷயங்களில் நான் தலையிடுவதில்லை. எந்த கட்சி நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டேன் என்று சொல்ல முடியுமா? எனது அதிகாரத்தில் தலையிட நேரு எம்.எல்.ஏ., அல்ல, உச்சநீதி மன்றத்திற்கே அதிகாரம் இல்லை.நேரு எம்.எல்.ஏ., மனு கொடுத்தது அவரது உரிமை. அது, அடுத்த சட்டசபை கூட்டத்தில் விவாதத்துக்கு வைக்கப்படும். அதற்கு 7 எம்.எல்.ஏ.,க்கள் கையெழுத்து தேவை. விவாதத்தின் அடிப்படையில் எடுக்கும் முடிவின்படி செயல்படுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ