உப்பனாற்றில் புதிய முறையில் துார் வாரும் பணி துவக்கம்
புதுச்சேரி: உப்பனாறு வாய்க்காலில், கழிவு நீரை அகற்றி, துார் வாரும் பணி பரிட்சார்த்தமாக நேற்று மேற்கொள்ளப்பட்டது.வடகிழக்கு பருவமழை துவங்க உள்ளதையொட்டி, பொதுப்பணித்துறை சார்பில் வடிகால்கள் துார் வாரி சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் புதுச்சேரி நகரின் பிரதான வடிகாலான, உப்பனாறு வாய்க்காலில் இதுவரை கழிவுநீர் உள்ள நிலையிலேயே பொக்லைன் இயந்திரங்களை கொண்டு துார் வரப்பட்டு வந்தது. இதனால், முழுமையாக துார் வார முடியாத நிலை இருந்தது.இதனால் இம்முறை, உப்பனாற்றில் கழிவுநீரை அகற்றிவிட்டு, அடியில் உள்ள சேற்றை முழுமையாக துார்வார அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இப்பணி பரிட்சார்த்தமாக மறைமலையடிகள் சாலை சந்திப்பில் உள்ள உப்பனாற்றில் மோட்டார் மூலம் கழிவு நீரை வெளியேற்றிவிட்டு, பொக்லைன் இயந்திரம் கொண்டு சேற்றை அகற்றும் பணியை துவங்கினர்.