உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சரணாலயமாக அறிவிக்கப்பட்ட ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு

சரணாலயமாக அறிவிக்கப்பட்ட ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிப்பு

புதுச்சேரி : தமிழகம், புதுச்சேரி என இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுச்சேரியில் இருந்து 10 கி.மீ., தொலைவில் ஊசுட்டேரி அமைந்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி, 850 ஹெக்டேரில் ஏரி பறந்து விரிந்துள்ளது.புதுச்சேரி பகுதியில் 390 ஹெக்டேரில் அமைந்துள்ளது. ஏரியின் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 15.54 சதுர கிலோ மீட்டராகும். ஏரிக்கரையின் மொத்த நீளம் 7.28 கி.மீ., ஊசுட்டேரி, 2008ம் ஆண்டு புதுச்சேரி அரசாலும் 2014ம் ஆண்டு தமிழக அரசாலும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த நன்னீர் ஏரியாக உள்ள ஊசுட்டேரியில் உள்நாட்டு பறவைகள் மட்டுமின்றி, மத்திய ஆசியா, ஐரோப்பிய கண்டங்களில் இருந்தும், சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் எண்ணற்ற பறவையினங்கள் நவம்பர் மாதம் துவங்கி, மார்ச் வரையில், ஊசுடேரிக்கு வலசை வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 130 வகையான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறவைகள் இங்கு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏரியில் வனவிலங்குகள், பறவைகள் நேற்று சரமாரியாக கொன்று குவிக்கப்பட்டன. அவற்றை விற்பதற்காக ஊசுட்டேரியின் சாலை மார்க்கமாக கொண்டு வந்த வேட்டை கும்பல், புதுச்சேரி வனத்துறை ஊழியர்களை கண்டதும் வேட்டையாடப்பட்ட விலங்குகளை போட்டுவிட்டு தப்பியோடியது.

அந்த கும்பல் விட்டு சென்ற இடத்தில், புனுகு பூனை, நரிகுட்டி, கீரிப்பிள்ளை, வவ்வால், பாம்புதாரா, சம்பு கோழி மற்றும் அரிவாள் மூக்கன், மடையன், மஞ்சள் மூக்கு நாரை, கொக்கு, செரவி வாத்து உள்ளிட்ட பறவையினங்கள் இறந்த நிலையில் கிடந்தன. மேலும் உயிருடன் நான்கு உடும்புகள், 40 கிளிகள் மீட்கப்பட்டன. மொத்தம் 108 வனவிலங்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, வனத் துறை வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.இந்த உயிரினங்கள் எப்படி கொல்லப்பட்டன என்று கண்டறிய மருத்துவ பரிசோதனை செய்ய வனத் துறை முடிவு செய்துள்ளன. இரு மாநிலங்களால் பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ள ஊசுட்டேரியில் வனவிலங்குகள், பறவைகள் கொன்று குவிக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை