உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பிளாஸ்டிக் பொருட்கள் மீதான நடவடிக்கைகளில் புதுச்சேரிக்கு சபாஷ்

பிளாஸ்டிக் பொருட்கள் மீதான நடவடிக்கைகளில் புதுச்சேரிக்கு சபாஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுச்சேரி: ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான நடவடிக்கைகளில் தேசிய அளவில் புதுச்சேரி சிறப்பிடம் பெற்றுள்ளது.ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் சவாலாக உள்ளன. இவை மக்குவதற்கு பல நுாறு ஆண்டுகளாகும் என்பதால், மண் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் குப்பைகளில் கலந்து திடக்கழிவு மேலாண்மைக்கும் சிக்கலாக உள்ளது. மேலும், ஒருமுறை பயன்படுத்திவிட்டு துாக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் நீர்நிலைகளும் மாசுபட்டு நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மற்ற உயிரினங்களுக்கும் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு, மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், உற்பத்தி செய்யவும், வினியோகிக்கவும், விற்பனை செய்வதற்கும் தடை உள்ளது. இதையடுத்து, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது. உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலைகளுக்கும் சீல் வைக்கப்படுகிறது.இதுதொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக, தேசிய அளவிலான சிறப்பு பணிக்குழுவை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இந்த சிறப்பு பணிக்குழுவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்கள் உறுப்பினராக உள்ளனர்.சமீபத்தில், 7வது, தேசிய சிறப்பு பணிக்குழுவின் கூட்டம் துறையின் செயலர் லீலா நந்தன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் செயல்பாடுகள் குறித்து விவாதித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில், பல்வேறு பிரிவுகளில் புதுச்சேரி சிறப்பிடம் பெற்றுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையை தடுப்பதற்கான கள ஆய்வில் தேசிய அளவில் மூன்றாவது இடத்தை புதுச்சேரி பிடித்துள்ளது. அதாவது, 1821 தொழிற்சாலைகள் மற்றும் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அதுபோல, 2 ஆண்டுகளில் 8.5 டன் எடையுள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து, தேசிய அளவில் மூன்றாவது இடத்தை புதுச்சேரி பிடித்துள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை மூடி சீல் வைப்பதில் 5வது இடத்தையும், அவற்றை விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதிப்பதில் 6வது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.புதுச்சேரி அரசின் அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் துறை மற்றும் புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமத்துடன், புதுச்சேரி, உழவர்கரை நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள், தொழிலாளர் நலத் துறை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை ஆகியவற்றின் அதிகாரிகள் கைகோர்த்து செயல்படுவதால் புதுச்சேரி சிறப்பிடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிடைப்பது எப்படி?

புதுச்சேரியில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதும், குறைந்த மைக்ரான் அளவிலான பாலித்தீன் பைகள் உள்ளிட்ட பொருட்களை தமிழகத்தில் இருந்து டூ வீலர்களில் தினசரி எடுத்து வந்து சாலையோர கடைகளில் வினியோகின்றனர்.இதன் காரணமாக, சிறிய கடைகளில் பாலித்தீன் பைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்த முடியவில்லை. இதை, புதுச்சேரி எல்லைகளில் போலீசார் கண்காணித்து சோதனை செய்தால் மட்டுமே கட்டுப்படுத்த முடியும்.

மக்களின் ஒத்துழைப்பு தேவை

முதல்வர், தலைமைச் செயலர், துறை செயலர், இயக்குனர் ஆகியோரின் வழிகாட்டுதல்படி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.இதன் எதிரொலியாக, ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி புதுச்சேரியில் முற்றிலுமாக தடுக்கப்பட்டுள்ளது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருட்களை மக்களுக்கு மான்ய விலைக்கு வழங்குவதற்காக, நேரு வீதி மற்றும் பாகூரில் 'சோலை' என்ற பெயரில் கடை திறக்கப்பட்டுள்ளது. இங்கு பாக்கு மட்டை, துணிப்பை, பேப்பர் கப் போன்றவை கிடைக்கும்.புதுச்சேரி உழவர்சந்தையில் துணிப்பை வெண்டிங் மெஷின் வைத்துள்ளோம். இந்த மெஷினில் தொகையை செலுத்தினால் துணிப்பை வெளியே வரும். மேலும், 2 இடங்களிலும் நிறுவ உள்ளோம்.அதிகாரிகள் முயற்சி செய்தால் மட்டும் போதாது. சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும், குறைந்த மைக்ரான் எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்த்து பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.ரமேஷ்,உறுப்பினர் செயலர்,புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டு குழுமம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

கூமூட்டை
ஆக 21, 2024 12:30

பசுமை காப்போம் பசுவை காப்போம் பிளாஸ்டிக் தவிர்க்க வேண்டும் நீர்நிலைகள் காப்போம்


TSRSethu
ஆக 21, 2024 10:49

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் தடை அரசு இயந்திரம் கண்டு கொள்வதில்லை. எல்லா இடங்களிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு கட்டுப்பாடு பல மடங்கு உயர்ந்துள்ளது. தெர்மோ பார்ம் அயிட்டங்கங்கள் கிடைக்கின்றன. பயோ டீகிரேடபிள் என்ற பெயரில் மீண்டும் வந்து விட்டது. தெர்மோகோல் கிடைக்கிறது. தின் வால் பொருட்களும் தெர்மோ பார்ம் போல 0.4 தடிமனில் கிடைக்கிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு சும்மா கண்துடைப்பு. மக்கள் தான் திருந்த வேண்டும்.


Ramki
ஆக 21, 2024 09:31

எத்தனை தான் ப்ளாஸ்டிக் ஒழிப்பு நல்லது என்கிற உயரத்தில் பாண்டிசேரி ஏறினாலும் கீழே இருந்து காலை இழுத்து விடும் நண்டு போன்று விளங்கும் விடியா ஆட்சியின் சிறப்பு குறையாது.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஆக 21, 2024 09:16

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு அதை தடை செய்துவிட்டதாக சொல்கிறது. பிளாஸ்டிக் உயிர்கொல்லி. அதை பயன்படுத்துவது நாம் மற்ற உயிர்களுக்கு செய்யும் துரோகம், பாவம். உடனடியாக இதை தடுத்து நிறுத்த வேண்டும். இதை உற்பத்தி செய்பவர்களை உடனடியாக தூக்கிலிட வேண்டும் .


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை