அரசு வாகனங்கள் இயக்குவதில் முறைகேடு கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., குற்றச்சாட்டு
புதுச்சேரி: சட்டசபை பூஜ்ய நேரத்தில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., பேசியதாவது:அரசுத் துறையில் அதிகாரிகள் பயன்பாட்டிற்காக ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்படும் வாகனங்களில் நடைபெறும் முறைகேட்டை அரசு கட்டுப்படுத்த வேண்டும்.ஒப்பந்தம் இந்த மாதம் மார்ச் 31ம் தேதியோடு முடிவடைய உள்ள நிலையில் டெண்டர் வைக்காமல் கொல்லைப் புறமாக ஒப்பந்த காலத்தை மேலும் 3 மாத காலம் நீட்டிக்க அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். இதை கைவிட்டு அனைவரும் பங்குபெறும் வகையில் நியாயமான முறையில் டெண்டர் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.ஒப்பந்த அடிப்படையில் வாகனம் இயக்கும் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. அதுமட்டுமல்லாமல் சர்வாதிகாரி போல அந்நிறுவனம் உரிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முறையாக கடைப்பிடிக்காமல் தகுதியில்லாத வாகனங்களை இயக்கும் நிலை உள்ளது.அந்நிறுவனத்திடம் போதிய வாகனங்கள் இல்லாத நிலையில் மற்ற ஏனைய டிராவல்ஸ் நிறுவனங்களில் இருந்து இயக்கும் வாகன உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் பணம் வழங்காமல் அரசிடம் இருந்து பெறப்படும் தொகையில் மிகக் குறைந்த தொகையை வழங்குகிறது. கொள்ளை லாபம் கொள்ளும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.