| ADDED : பிப் 11, 2024 02:07 AM
புதுச்சேரியில் ஆன்லைன் மோசடிகள் புது புது விதங்களில் நடந்து வருகிறது. சமீபகாலமாக, மும்பை போலீஸ், டில்லி போலீஸ் என பேசும் மர்ம நபர்கள், 'உங்கள் பெயரில் பார்சல் வந்துள்ளது. அதில், போதை பொருள் இருப்பதால் உங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது' என மிரட்டுகின்றனர்.மேலும், 'வழக்கில் இருந்து தப்பிக்க அபராத பணம் செலுத்த வேண்டும்' என கூறுகின்றனர். அடுத்த சில நிமிடத்தில் வீடியோ காலில் போலீஸ் உடை அணிந்து கொண்டு மர்ம நபர் தோன்றி மிரட்டுகிறார். இதனால், பயந்துபோன நபர்கள் மர்ம நபர் கூறும் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தி பணத்தை இழந்து வருகின்றனர்.இந்த வரிசையில் புதுச்சேரியை சேர்ந்த மணிகண்டன் சஞ்சிவ் என்கிற நபரை தொடர்பு கொண்ட மர்ம நபர், தான் மும்பை போலீஸ் என அறிமுகம் செய்து கொண்டு, உங்களுக்கு தைவான் நாட்டில் இருந்து பார்சல் வந்துள்ளதாகவும், அதில் போதை பொருட்கள் இருப்பதால் அதற்கு அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதை நம்பி மணிகண்டன் சஞ்சிவ் ரூ. 5 லட்சத்தை செலுத்தினார்.பின் விசாரித்தபோது, மும்பை போலீஸ் என கூறி ஏமாற்றியது தெரிய வந்தது.புதுச்சேரியை சேர்ந்த சேபியா என்ற பெண்ணிடம், வீட்டில் இருந்து வேலை என கூறி ரூ. 1.79 லட்சம், வனிதா என்ற பெண்ணிடம் ரூ. 4.22 லட்சம் ஏமாற்றி உள்ளனர். இதுபோல் நேற்று முன்தினம் மட்டும் 12 புகார்கள் வந்துள்ளன.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'வெளிநாடுகளுக்கு பார்சல் அனுப்புபவர்கள் குறித்த தகவல்களை திருடி வைத்துக் கொண்டு, அத்தகை நபர்களை மும்பை போலீஸ் என மர்ம நபர்கள் மிரட்டி வருகின்றனர்.இதுபோன்ற மிரட்டல் போன்கள் வந்தால், பொதுமக்கள் உடனடியாக சைபர் கிரைம் போலீசுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தனர்.