| ADDED : ஜன 03, 2024 06:31 AM
திருக்கனுார் : பிள்ளையார்குப்பம் - செல்லிப்பட்டு படுகை அணை உடைந்து மூன்று ஆண்டுகளாகியும் சீரமைக்காததால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.புதுச்சேரி, செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பிரெஞ்சு ஆட்சிக்காலத்தில் கடந்த 1906ம் ஆண்டு படுகை அணை கட்டப்பட்டது.இந்த படுகை அணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீரின் மூலம் அதனை சுற்றிலும் 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.போதிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016ம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் சேதமடைந்தது. தொடர்ந்து, கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 20ம் தேதி கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பால், சேதமடைந்து இருந்த அணையின் நடுப்பகுதி முற்றிலும் உடைந்தது.இதனால் பல்லாயிரம் கனஅடி நீர் வெளியேறி வீணாக கடலில் கலந்து. இதன் காரணமாக எப்போதும் தண்ணீர் தேங்கி காணப்படும், செல்லிப்பட்டு- பிள்ளையார்குப்பம் படுகை அணை, தண்ணீர் இல்லாமல் வறண்டது.இதனிடையே, செல்லிப்பட்டு - பிள்ளையார்குப்பம் இடையே பொதுப்பணித்துறை மூலம் புதிய படுகை அணை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தான் படுகை அணை அமைப்பதற்காக ரூ.19.50 கோடி டெண்டர் விடப்பட்டுள்ளது.இருப்பினும் புதிய படுகையணை அமைக்கும் பணி துவங்காததால் சமீபத்தில் மழை பெய்தும், செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் சிறிதளவு மழைநீர் கூட தேங்காமல் வறண்டு உள்ளது.இதனால், இந்தாண்டு விவசாய பாசனத்திற்கு, தண்ணீர் கிடைக்குமா, கிடைக்காத என்ற வேதனையில் விவசாயிகள் உள்ளனர்.எனவே, படுகை அணை அமைக்கும் பணியினை விரைவில் துவக்கி, அடுத்த ஆண்டு மழைக்காலத்திற்கு முன், முடிப்பதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.