பஸ்சில் பெண் தவறவிட்ட நகைபை போலீசார் மீட்டு ஒப்படைப்பு
புதுச்சேரி: தனியார் பஸ்சில் பெண் தவறவிட்ட 5 சவரன் நகையை உருளையன்பேட்டை போலீசார் விரைந்து மீட்டு ஒப்படைத்தனர். வானுார் அடுத்த சேமங்கலம், எலவம்பட்டைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன் மனைவி இந்திரா, 51. இவர் கடந்த 3ம் தேதி சென்னைக்கு செல்வதற்காக, கிளியனுாரில் இருந்து புதுச்சேரி பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் வந்துள்ளார்.புதுச்சேரி பஸ் நிலையம் வந்தபோது, பஸ்சில் இருந்து கீழே இறங்கும் அவசரத்தில், 3 சவரன் செயின், ஒரு சவரன் கம்மல், கால் சவரன் மோதிரம் மற்றும் மூக்குத்தி ஆகியவற்றை வைத்திருந்த கைப் பையை பஸ்சின் சீட்டிலேயே வைத்து விட்டு இறங்கியுள்ளார். அதன்பிறகே, தன் கையில் வைத்திருந்த பையை காணமால் போய் இருப்பது தெரியவந்தது. இது குறித்து இந்திரா உருளையன்பேட்டை போலீசில் நகை வைத்திருந்த பை காணமால் போனது குறித்து புகார் அளித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உத்தரவின்பேரில், கிரைம் போலீசார் இந்திரா வந்த தனியார் பஸ்சில் இருந்த சி.சி.டி.வி.,கேமரா காட்சிகளை பார்வையிட்டனர்.அதில், அந்த நகை வைத்திருந்த பையை பெண் ஒருவர் எடுத்து செல்வது தெரியவந்தது. மேலும், அப்பெண் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் என்பதும் தெரிந்தது. தொடர்ந்து, பெண்ணின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தில், பஸ்சில் இருந்து எடுத்து சென்ற நகை பை பயத்தின் காரணமாக போலீசில் ஒப்படைக்கவில்லை எனவும், யாராவது வந்து கேட்டால் கொடுத்து விடலாம் என பத்திரமாக வைத்திருந்ததாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, அவரிடம் இருந்த நகை பை மீட்ட போலீசார், நகைகளை சரி பார்த்து இந்திராவிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். காணாமல் போன நகையை விரைந்து மீட்ட கிரைம் போலீசாரை, இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் பாராட்டினர்.